
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியாக, சரயு நதிக்கரையில் 100 அடி உயரத்துக்கு ராமர் சிலை ஒன்றை நிறுவ மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது.
அயோத்தியி, சரயு நதிக்கரையில் ராமர் சிலை நிறுவுவது குறித்த யோசனை மாநில ஆளுநர் ராம் நாயக்கிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமூக, ஆன்மிக, மத ரீதியிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, இவ்வாறு ராமர் சிலையை அமைக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளதாம். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், இந்த யோசனை நடைமுறைப்படுத்தப் படும் என்று ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், நவ்யா அயோத்யா எனும் பெயரில், ராமர் சிலை அமைப்பது குறித்து திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துவக்கத்தில் 100 மீட்டர் உயரத்தில் சிலை என்று யோசிக்கப்பட்டதாம். ஆனால் அது முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார் சுற்றுலாத்துறையின் முதன்மைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி.
உ.பி. அரசு, பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் விதத்தில், திட்டங்களை முன்வைத்துள்ளது. அவற்றில் ஒன்று தான் அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமர் சிலை அமைப்பது. ராமர் சரித்திரத்தைக் கூறும் கேலரி, ஆடிட்டோரியம் ஒன்றும் திகம்பர் அகாடாவில் அமைக்க திட்டம் உள்ளதாம்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைப்பது என்பது பாஜக., வின் கொள்கை ரீதியான, உணர்வுபூர்வமான விஷயமாக இருந்து வருகிறது. உத்தரப் பிரதேச தேர்தல் அறிக்கைகளில் ராமர் கோயிலும் தவறாமல் இடம்பெறும். எனவே, தற்போதுள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் அமைக்கும் முன்னர், அயோத்தியில் சரயு நதிக்கரையில் புதிய கோயிலைக் கட்டி, இந்து அமைப்புகளை சமாதானப் படுத்தலாம் என்று பாஜக தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது என்கிறார்கள்.
முன்னதாக, கவனம் தேவைப்படும் சுற்றுலா தலங்கள் குறித்த மாநில அரசின் நிதி அமைச்சர் அறிக்கையில், அதன் சிறப்பு பிரிவில் தாஜ்மகால் குறிப்பிடப் படவில்லை. இது பெரும் பிரச்னையைக் கிளப்பியது. ஆனால், ஏற்கெனவே போதுமான கவனம் தாஜ்மகால் மீது இருப்பதால், சிறப்புப் பட்டியலில் தாஜ்மகால் சேர்க்கப்படவில்லை என்று மாநில அரசு தெளிவாக்கியது.