
யார் அந்த மூன்று அமைச்சர்கள்? தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் கேள்வி இப்போதைக்கு இதுதான்! அந்த மூன்று அமைச்சர்களையும் உளவுத் துறை வைத்து வலைவீசித் தேடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி என்பது கூடுதல் பரபரப்பு.
பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சென்னைக்கு வந்தார் சசிகலா. அவர் தி.நகரில் உள்ள உறவினர் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருக்கிறார். அவரை அரசியல் ரீதியாக எவரும் சென்று சந்திக்கக் கூடாடு என்றெல்லாம் கர்நாடக சிறைத்துறை நிபந்தனைகளை விதித்து பரோலில் அனுப்பியுள்ளது. ஆனால், சிறைத்துறை நிபந்தனைகளையெல்லாம் மீறி, வீட்டுக்குள் இருந்தபடியே தீவிரமாக அரசியல் செய்து வருகிறார் சசிகலா.
சசிகலாவை வீட்டின் பின்வாசல் வழியாகச் சென்று அரசியல் ரீதியாக சிலர் சந்தித்து வருகிறார்களாம்.
இப்படி, கடந்த இரண்டு நாட்களாகவே, வீட்டில் இருந்தபடியே போன் மூலம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் பேசி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட சிலரைத் தயார் படுத்தி வருகிறார் சசிகலா. இதை அறிந்து கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, தன் தரப்பில் அதிருப்தியுடன் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களை அழைத்து சமாதானம் செய்து வருகிறாராம்.
இந்நிலையில், இது போல், மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த இரு அமைச்சர்களும், தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் அமைச்சரும் சசிகலா தங்கியிருக்கும் வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது, சசிகலாவைச் சந்தித்து அரசியல் ரீதியாக, சில நடவடிக்கைகள் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. இது குறித்த தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக அமைச்சர்கள் வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை போட்டுதான் செல்வார்கள். ஆனால், இந்த சந்திப்புக்காக, அவர்கள் மாறு வேடத்தில் சென்றார்களாம். அதற்காக, கலர் கலராக பேண்ட் சட்டை போட்டுக் கொண்டு, சினிமா பாணியில் தங்களை மாற்றிக் கொண்டு சென்றார்களாம்.
இவ்வாறு மூன்று அமைச்சர்கள், சசிகலாவை சந்தித்த தகவல் வெளியாகி பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், அந்த மூவர் யார் என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உளவுத்துறையினர் மூலம் அறிந்து கொண்டாராம். அவர்கள் மூவரிடமும் என்ன பிரச்னை, ஏன் சசிகலாவை சந்தித்தீர்கள் என்று கேட்டறிந்தாராம்.
அப்போது அவர்கள் தம் துறை அதிகாரிகள் உள்பட எவரும் தம்மை மதிக்கவில்லை என்றும், தாம் இதனை முதல்வரிடம் தெரிவித்தபோதும், எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் வருத்தப் பட்டு, அதனை சசிகலாவிடம் தெரிவிக்கவே சென்றதாகக் கூறியுள்ளனர். இவ்விதமான புகாரைக் கேட்டு, அவர்களிடம் இருந்து புகார்களை எழுதி வாங்கிக் கொண்டு, உரிய நேரத்தில் அனைத்தும் சரிசெய்யப்படும். எனவே தேவையற்ற முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம் என்று அவர்களிடம் முதல்வர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, தொடர்புடைய அமைச்சகங்களில் பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.