
டெங்கு பாதிப்பு குறித்த உண்மையை அரசு மூடி மறைக்க முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதி வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், டெங்குவின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பாதிப்பு குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெங்கு பாதிப்பை அரசு மூடி மறைக்கப் பார்க்கிறது என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசு டெங்கு பாதிப்பை மூடி மறைப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், டெங்குவை கட்டுப்படுத்துவதில் ஆட்சிக்கு கவலை இல்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்த உண்மைகளை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
அரசு விழாக்கள் நடத்துவதை தமிழக அரசு தவிர்த்து விட்டு மக்கள் பிரச்சனையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் முத்தரசன் கூறினார்.