
தேச துரோக வழக்கில் தினகரன், புகழேந்தி மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சேலத்தில் நோட்டீஸ் விநியோகித்தது உள்ளிட்ட விவகாரங்களால், சேலம் அன்னதானப்பட்டி போலீசார் தினகரன், புகழேந்தி ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்படலாம் என்று பரபரப்பாகக் கூறப்பட்டது. இதனிடையே சசிகலா சிறையில் இருந்து வெளிவந்தார். அவரை சிறையிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து கூடவே இருந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் தினகரன்.
இதனிடையே தாங்கள் இருவரும் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், போலீஸாரின் நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் தினகரன், புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும், போலீசார் பதிலளிக்கும் வரை, இந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக போலீசார் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும், 24ஆம் தேதி வரை டிடிவி தினகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அன்றைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தது.