எடியூரப்பாவின் நம்பிக்கை.. குமாரசாமியின் உறுதி!! வெல்லப்போவது எது..? அனல் பறக்கும் கர்நாடக அரசியல் களம்

Asianet News Tamil  
Published : May 19, 2018, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
எடியூரப்பாவின் நம்பிக்கை.. குமாரசாமியின் உறுதி!! வெல்லப்போவது எது..? அனல் பறக்கும் கர்நாடக அரசியல் களம்

சுருக்கம்

yeddyurappa and kumaraswamy are very strong in their view

இன்று மாலை 4 மணிக்கு கர்நாடக சட்டசபையில் நம்பிக்கைவ் வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிப்பேன் என கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும், நிரூபிக்க முடியாது என குமாரசாமியும் திட்டவட்டமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி 222 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, 15ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 78 மற்றும் மஜத 38 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஒரு தொகுதியிலும் சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. காங்கிரஸும் மஜதவும் கூட்டணி சேர்ந்ததால், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது. அதைத்தொடர்ந்து குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவும் ஆட்சியமைக்க உரிமை கோரியது. ஆளுநர், எடியூரப்பாவை அழைத்து முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் வழங்கினார் ஆளுநர்.

இதை எதிர்த்து காங்கிரஸ்-மஜத தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இன்று மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து குதிரை பேரத்தை தடுப்பதற்காக ஹைதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்ட காங்கிரஸ்-மஜத எம்.எல்.ஏக்கள் மீண்டும் பெங்களூருவுக்கு அழைத்து வரப்பட்டு, ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிப்பேன் என எடியூரப்பா திட்டவட்டமாக கூறி வருகிறார். ஆனால், எடியூரப்பாவால் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என குமாரசாமி உறுதியாக கூறுகிறார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எடியூரப்பா,  பாஜகவுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. 104 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மீதம் உள்ளவர்கள் யார் என்பதை இப்போது கூறமாட்டேன். சட்டப்பேரவை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் என்ன தந்திரம் செய்தாலும், அதை தோற்கடித்து பெரும்பான்மையை நிரூபிப்பேன். சட்டப்பேரவை உறுப்பினர்கள் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும் என எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பேசிய மஜத தலைவர் குமாரசாமி, பாஜகவிடம் 104 எம்.எல்.ஏ.க்களே உள்ளதால், அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது. இதற்கிடையே, முதல்வர் பதவியை ஏற்றவுடன் அதிகாரிகளை எடியூரப்பா மாற்றியுள்ளார். பாஜகவினர் மஜத எம்.எல்.ஏக்களை தங்களுக்கு ஆதரவாக இழுக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் யாரும் பாஜகவிற்கு ஆதரவாகச் செல்லமாட்டார்கள். இதேபோல், எங்களுக்கு ஆதரவாக பாஜக எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் எண்ணமில்லை. சனிக்கிழமை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவால் அறுதிப் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள கர்நாடக அரசியலில் இன்று முக்கியமான நாள். பெரும்பான்மையை நிரூபிப்பேன் என எடியூரப்பாவும், நிரூபிக்க முடியாது என காங்கிரஸ்-மஜத கட்சிகளும் கூறிவருகிறது. வெல்லப்போவது யார்..? தோற்கப்போவது யார்..? என்பது மாலை 4 மணிக்கு தெரிந்துவிடும்.
 

PREV
click me!

Recommended Stories

எதிரிக்கு எதிரி நண்பன்... ஒ.பி.எஸ் எண்ட்ரியால் ரணகளப்படும் தேனி திமுக..!
முதலமைச்சர் டூ MP.. ரிவர்ஸ் கியர் போடும் நிதிஷ் குமார்.. அழுத்தம் கொடுக்கும் பாஜக..?