
கர்நாடக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக போப்பையாவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. மஜத-விற்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. இரு கட்சிகளும் கூட்டணி அமைத்ததால், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைத்தது. எனவே இந்த கூட்டணி சார்பில் குமாரசாமி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார். அதேநேரத்தில் தனிப்பெரும் கட்சியான பாஜகவும் உரிமை கோரியது.
தனிப்பெரும் கட்சியாக பாஜக உள்ளதால், எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் வஜூபாய் வாலா, எடியூரப்பாவிற்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கினார் ஆளுநர். போதிய பெரும்பான்மை இல்லாத எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெரும்பான்மையை எடியூரப்பா நாளைக்கே நிரூபிக்க வேண்டும். நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த அனுமதியில்லை. வெளிப்படையான வாக்கெடுப்பாகவே அமைய வேண்டும். அதற்கு முன்னதாக தற்காலிக சபாநாயகரை நியமிக்க வேண்டும். அந்த தற்காலிக சபாநாயகர், எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். பின்னர் எம்.எல்.ஏக்கள் வாக்களித்து சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டும். அந்த சபாநாயகர், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து பாஜக எம்.எல்.ஏ கே.ஜி.போப்பையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வஜூபாய் வாலா நியமித்துள்ளார். விராஜ்பேட் தொகுதியில் வெற்றி பெற்றவர் போப்பையா. இவர் ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை சபாநாயகராக இருந்தவர்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு போப்பையாவை தற்காலிக சபாநாயகராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்-மஜத சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், பொதுவாக, சட்டப் பேரவை இடைக்காலத் தலைவராக மிக மூத்த எம்எல்ஏவை தேர்வு செய்வதே நடைமுறை. ஆனால், போப்பையா மிக மூத்த எம்எல்ஏ இல்லை. மேலும், பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் அக்கட்சி எம்எல்ஏவை பேரவையின் இடைக்காலத் தலைவராக நியமித்துள்ளனர். ஆளுநரின் இந்த நடவடிக்கை அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடகப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற வேண்டும். மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது பேரவை நிகழ்வுகளை முழுமையாக விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே. சிக்ரி தலைமையிலான அமர்வு, இன்று(மே 19) இந்த வழக்கை விசாரிக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், காலை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.