சரியான பாயிண்டை பிடித்து அடுக்கடுக்கான கேள்விகள்.. மோடி, ஜேட்லியை தெறிக்கவிடும் யஷ்வந்த் சின்ஹா..!

First Published Nov 17, 2017, 3:48 PM IST
Highlights
yashwant sinha slams modi and jaitley


பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூட்டணியால் இந்திய பொருளாதாரம் ஊனமாகி ஒற்றைக்காலில் நிற்பதாகவும் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குற்றம்சாட்டியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார்.

குஜராத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய யஷ்வந்த் சின்ஹா, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டு மக்கள் மிகப்பெரிய திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். 700 ஆண்டுகளுக்கு முன்னர், முகமது பின் துக்ளக் மன்னரால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்டது. அப்போதைய காலக்கட்டத்தில் நடைமுறை சாத்தியமில்லாத அந்த நடவடிக்கை, படு தோல்வி அடைந்தது. அதைப்போலவே 700 ஆண்டுகளுக்கு பின்னர் மோடியால் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் படு தோல்வி அடைந்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து தொலைக்காட்சியில் தோன்றி ஒருமணி நேரத்திற்கும் மேலாக விளக்கமளித்த பிரதமர் மோடி, சுமார் 75 முறை கறுப்புப்பணம் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால் ஒருமுறைகூட டிஜிட்டல் பொருளாதாரம் அல்லது பணமில்லா பரிவர்த்தனை என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. ஆனால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பணமில்லா பரிவர்த்தனை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காகவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு கூறுகிறது. 

உண்மையில், மோடி மற்றும் அருண் ஜேட்லியின் கூட்டணியால் அரசுக்கு ரூ.3.75 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை யார் ஈடுகட்டுவது? 

நிதி அமைச்சரோ, ஆர்பிஐ ஆளுநரோ அறிவிக்க வேண்டியதை பிரதமர் ஏன் கையில் எடுக்கவேண்டும்? தற்போது ஊனமாகி ஒற்றைக்காலில் நிற்கும் இந்திய பொருளாதாரத்தை பற்றி மோடியும் அருண் ஜேட்லியும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என யஷ்வந்த் சின்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது டிஜிட்டல் பொருளாதாரம், பணமில்லா பரிவர்த்தனை ஆகியவை குறித்து பேசாத மோடி, பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகாகத்தான் அவை பற்றியெல்லாம் பேசுகிறார் என யஷ்வந்த் சின்ஹா, சரியான பாயிண்டைப் பிடித்து எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பிரதமர் மோடியும் நிதியமைச்சர் ஜேட்லியும் பதிலளிப்பார்களா?
 

click me!