
மகனை இரும்பிக் கம்பியால் அடித்துச் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல பத்திரிக்கையாளரும், எழுத்தாளருமான சௌபா என்ற சௌந்திர பாண்டியன் உடல் நலக்குறைவால் இன்று காலை மரணமடைந்தார்.
பத்திரிகையாளரும், எழுத்தாளருமான சௌபா என்ற சௌந்திரபாண்டியன் மதுரை கோச்சடை டோக் நகரில் வசித்து வந்தார்.. இவருக்கும் இவரது மனைவி லதாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். . இவரது ஒரே மகன் விபின். இவர் சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் முதுகலைப் படிப்பு முடித்துள்ளார். எங்கும் வேலைக்கு செல்லாததால் தந்தை அல்லது தாயுடன் மாறி மாறி வசித்து வந்தார்.
சில நாட்களாக விபினை பார்க்கவில்லை என்று லதா எழுத்தாளர் சௌபாவிடம் கேட்டுள்ளார். ஆனால் சௌபா தனக்கு விபின் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதனால் மகனைக் காணவில்லை என்றும் அது தொடர்பாக கணவர் சௌபா மீது சந்தேகம் இருப்பதாக கடந்த மே 5-ம் தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸில் புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக போலீசார் சௌபாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.. முதலில் விபினை பற்றி எனக்கு தெரியாது என்று சொல்லி வந்த சௌபா பிறகு மகனை போதை அடிமைகள் மறுவாழ்வு மையத்தில் விபினைச் சேர்த்ததாகக் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறை சௌபாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர் விபினின் செல் போனும் சௌபாவின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் சந்தேகம் வலுக்க தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் மறுத்து வந்த சௌபா பின்பு விபின் தினமும் குடித்து விட்டு சொத்து கேட்டு தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கம்பியால் அடித்ததாகவும், இதில் விபின் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார். யாருக்கும் தெரியாமல் உடலை கொடை ரோட்டில் இருக்கும் அவரது தோட்டத்தில் எரித்து, சாம்பலை 10 அடி ஆழத்தில் புதைத்துவிட்டதாக தெரிவித்தார்.
செளபா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவருடைய தோட்டத்தில் வேலை செய்த இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து மதுரை மத்திய சிறையில் சௌபா அடைக்கபபட்டார்.
அவருக்கு சர்க்கரை நோய் இருந்து வந்தது. நோய் முற்றியதையடுத்து செளபா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சௌபா மரணமடைந்தார்