
ஜூன் மாதம் ராஜ்ய சபா தேர்தல்
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேரின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் முடிவடையவுள்ளது. இந்த காலியாக உள்ள 6 ராஜ்ய சபா உறுப்பினர்களில் 4 பேர்கள் திமுக சார்பாகவும், 2 பேர் அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். யார் அந்த இரண்டு பேர் என்ற கேள்வி அதிமுகவினரிடையே எழுந்துள்ளது. ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் மாநில அரசியலுக்கு திரும்பியதால் ராஜ்யசபா பதவியை பாதியில் விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அந்த வாய்ப்பு திமுகவிற்கு கிடைத்துள்ளது. இதே போல அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லிக்கு சென்ற முகம்மது ஜான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதன் காரணமாகவும் டெல்லியில் அதிமுகவின் பலம் குறைந்தது.
அதிமுகவில் இருந்து டெல்லி செல்வது யார்?
இந்தநிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் 80 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது. தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மை சமூகத்திடம் அதிமுகவின் செல்வாக்கு சரிந்ததாக கூறப்பட்டது. எனவே இதனை சரி செய்யும் வகையில், தென் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கு ராஜ்யசபா பதவி வழங்க வேண்டும் என அதிமுகவில் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் 2016ம் ஆண்டுக்கு பிறகு தென்மாவட்ட பெரும்பான்மை சமூகத்திற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படவில்லை என்பதும் தென்மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பெரும் குறையாக உள்ளது. இதனிடையே அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்படவுள்ள இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
2 இடங்களுக்கு 400 பேர் போட்டி
அதிமுகவிற்கு கிடைக்க கூடிய 2 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு 400க்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவிற்கு சட்டமன்றம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையினர் வாக்கு குறைந்ததால் அதனை சரி கட்டும் வகையில் ஏற்கனவே தமிழ் மகன் உசேனுக்கு அவைத்தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் தனக்கு ராஜ்யசபா பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, பொன்னையன், உள்ளிட்ட பலரும் தங்களுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்க வேண்டும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது