
சட்டப்பேரவைக்குள் செல்ல அடையாள அட்டையைக் காண்பித்தும், உள்ளேவிட மறுத்தது கண்டனத்திற்குரியது என்று டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்செல்வன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர், தனபால் வரவேற்றார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றினார்
அப்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர், புரோகித், வருவாய் குறைந்தபோதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துகிறது என்றும் ஒகி புயலின்போது காணாமல்போன கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்பு பணியை மத்திய அரசு தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க. தமிழ்செல்வன், சட்டப்பேரவைக்குள் விட போலீசார் மறுத்தனர். இதனால், தங்க தமிழ்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்செல்வன், தங்களைப் பார்த்தாலே ஆளுங்கட்சிக்கு பயம் என்று கூறினார்.
ஒரு எம்.எல்.ஏ. உள்ளே இருப்பதைப் பார்த்தே எல்லோரும் பயந்து கொண்டிருப்பதாகவும், இனி நாங்கள் எல்லோரும் போனால் அவ்வளவுதான். அதான் எங்களை உள்ளே விட மறுப்பதாகவும் கூறினார். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரட்டும். என்னுடைய முகத்தை இந்த தமிழகத்துக்கே அடையாளம் தெரியுமே? என்றார்.
நான் அடையாள அட்டையைக் காட்டியும் எங்களை உள்ளே விட மறுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்றும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும்
தங்க தமிழ்செல்வன் கூறினார்.