அரசால் நடத்த முடியலனா தனியார்கிட்ட கொடுத்துடுங்க - அரசை வெளுத்து வாங்கிய தலைமை நீதிபதி

 
Published : Jan 08, 2018, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
அரசால் நடத்த முடியலனா தனியார்கிட்ட கொடுத்துடுங்க - அரசை வெளுத்து வாங்கிய தலைமை நீதிபதி

சுருக்கம்

high court chief justice condemns tamilnadu government

போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள், பணியாளர்கள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தை முடித்துகொண்டு பணிக்கு திரும்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் வாராஹி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

அதற்கு, தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்டுத்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சிஐடியூ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்களின் நலனில் அரசு அக்கறை காட்டுவதில்லை. போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 5000 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். இது, திடீர் போராட்டமோ, தொடர் போராட்டமோ கிடையாது. கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதியே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என சிஐடியூ தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஓய்வூதியதாரர்களுக்கு 1138 கோடியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பின் வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் எனக்கோ, வழக்கறிஞர்களுக்கோ, உயரதிகாரிகளுக்கோ பாதிப்பில்லை. பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் ஏழை மக்கள் தவிக்கின்றனர்.

உங்கள் போராட்டத்தால் பாதிப்பு யாருக்கு என்பதை உணர்ந்துள்ளீர்களா? என தொழிற்சங்கத்திடம் தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பினார்.

போக்குவரத்து ஊழியர்களுக்கான பணிக்கொடை, ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்காதது ஏன்? நிலுவைத் தொகையை வழங்க தாமதம் ஏன்? என அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை படிப்படியாக கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

போக்குவரத்துத் துறையை நடத்த முடியவில்லை என்றால் தனியார் மயமாக்குங்கள் என தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!
அன்புமணிக்கு பாமகவில் ஒரு துளியும் உரிமை இல்லை..! நோட்டீஸ் விட்ட ராமதாஸ்..!