
செழிப்பு மிக்க தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் இபிஎஸ் அரசு செயல்பட்டு வருவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக அரசை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சபாநாயகர், தனபால் வரவேற்றார். சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த பன்வாரிலால் புரோஹித், ஆங்கிலத்தில் உரையாற்றினார்
அப்போது அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர், புரோகித், வருவாய் குறைந்த போதிலும் தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துகிறது என்றும் ஒகி புயலின்போது காணாமல்போன கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்ப் பணியை மத்திய அரசு தொடர்கிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜெயலலிதா வகுத்துத் தந்த பாதையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க இந்த அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது என்றும் பாராட்டுத் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை பட்ஜெட்டில் அரசு அறிமுகப்படுத்தும் என்றும், ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார் .
பட்டா மாறுதல் உட்பட இணையதளம் வழியிலான அரசு பணிகள் மக்களுக்கு பயனளிக்கிறது என்றும் புரோகித் தெரிவித்தார்..அடுத்த 5 ஆண்டுகளில் 300 இ-சேவை மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
கச்சத்தீவை மீட்க மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்துகிறது என்றும் குறிப்பிட்ட ஆளுநர், மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தர தீர்வு என்றும் கூறினார்.
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஓரளவு குறைந்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும். இந்த திட்டத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி வழங்க உலகவங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்றும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்..