மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று வெளியீடு

By Ajmal KhanFirst Published May 23, 2022, 9:25 AM IST
Highlights

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில், அதிமுக சார்பாக இன்று வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் செம்மலை, மற்றும் கிருத்திகா முனுசாமிக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 

அதிமுக வேட்பாளர் யார்?

நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி  திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஏற்கனவே திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள்  வெளியிடப்பட்டுள்ள்து. . அதில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் கடும் போட்டி

இந்தநிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 19 ஆம் தேதி அதிமுக சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பலரும் தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க  முடியாத நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு தனியாக ஆலோசனை நடத்தியது. இதில் தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அந்த மாவட்டத்தை தேர்ந்த நிர்வாகிகளுக்கு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து சாதி ரீதியாகவும் யாருக்கு வழங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தென் மற்றும் வட மாவட்டங்களுக்கு வாய்ப்பு

இந்தநிலையில் முதல் கட்டமாக ராஜ்சத்யன், சி.வி.சண்முகத்தின் சகோதரர் சி.வி.ராதாகிருஷ்ணன், இன்பதுரை ஆகியோருக்கு ராஜ்யசபா சீட் வழங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து தற்போது முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா முனுசாமி ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. வட மாவட்டங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் வன்னியர் சாதியை சேர்ந்த செம்மலைக்கும், தேவர் சமுதாயத்தை சேர்ந்த கிருத்திகா முனுசாமிக்கும் ராஜ்யசபா சீட் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த உறுதியான தகவல் இன்று வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.


 

click me!