அதிகரிக்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்... நாளை டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published May 23, 2022, 8:01 AM IST
Highlights

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார். 

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தண்ணீர் திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயினருவியில் குளிப்பதற்கும், காவிரியில் பரிசல் இயக்குவதற்கும் விதிக்கப்பட்ட தடை, நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி நீர்வரத்து 25,161 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. திறப்பை காட்டிலும், வரத்து அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.67 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு 117 அடியாக உயர்ந்தது. 

இந்த அணை பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் உட் பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். குறுவை, சம்பா மற்றும் தாளடி பயிர் களுக்கு 230 நாட்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருந்தால் குறிப் பிட்ட நாளில் தண்ணீர் திறக்கப்படும். கடந்தாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் குறிப்பிட்ட நாளான ஜூன் 12ல் காவிரி டெல்டா பாசனத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார். 28.1.22 வரை 129 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் அணை மூடப்பட்டது. இந்நிலையில், நடப்பாண்டு நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும், மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் வழக்கமான தேதிக்கு முன்பாக, இம்மாதம் மே 24ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, நாளை காலை, மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்கிறார். பின்னர் கார் மூலம் மேட்டூருக்கு செல்லும் அவருக்கு, சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் தீவட்டிப்பட்டியில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து தொப்பூர் வழியாக மேச்சேரிக்கு செல்லும் அவருக்கு, மேற்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர், மேட்டூருக்கு சென்று இரவு ஓய்வெடுகிறார். நாளை காலை 10 மணிக்கு, மேட்டூர் அணைக்கு சென்று, டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைக்கிறார். முன்னதாகவே தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதால், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 4,91,200 ஏக்கர், கடலூரில் 30,800 ஏக்கர் என 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும். இதனால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!