மது பானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை முடிவு …. முதலமைச்சர் அதிரடி …

By Selvanayagam PFirst Published Jul 5, 2019, 10:02 PM IST
Highlights

புதுச்சேரியில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலைகளை உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசுக்கு வருவாய் கிடைக்கும் வகையில் மதுபானங்களின் வரியை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் 2019 - 2020 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாகவும், பட்ஜெட்டில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று  அமைச்சரவை கூட்டம்  நடைபெற்றது. 

இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் துறை செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் நிறைவு பெற்றதை தொடர்ந்து முதலமைச்சர்  நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கியில் வாங்கும் கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தினால், மத்திய அரசு வட்டி தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், இனி வரும் காலங்களில் மாநில அரசும் 3 சதவீத வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாகவும், இதன்மூலம் 2500 மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் என்று கூறினார். 

புதுச்சேரியில் வெளிநாட்டு மதுபானங்கள் விலை தமிழகத்தை விட 60% குறைவாக உள்ளது. எனவே புதுச்சேரியில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 2 முதல் 3 ரூபாய் வரை விலையை உயர்த்தி, வரி வருவாயை பெருக்குவதற்கு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஏற்கனவே திட்டமிட்டபடி தடை விதிக்கப்பட உள்ளதாக முதலமைச்சர்  நாராயணசாமி  தெரிவித்துள்ளார்.

click me!