மீண்டும் டேக்-ஆப் ஆகுமா பாமக...? சட்டப்பேரவைக்கு செல்லப்போவது எத்தனை பேர்..?

By Asianet TamilFirst Published May 1, 2021, 9:13 PM IST
Highlights

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், 10 ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவையில் பாமக இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 

தமிழகத்தில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சட்டப்பேரவைக்கு 10 ஆண்டுகள் கழித்து நுழையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பாமக தொடங்கிய பிறகு அக்கட்சி 1991 சட்டப்பேரவைத் தேர்தலிலிருந்து போட்டியிட்டு வருகிறது. 1991-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். அப்போது கட்சியின் சின்னமான யானை மீது பண்ருட்டி ராமச்சந்திரனை ஏற்றி அக்கட்சி சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தது.
இதேபோல 1996ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக ஆண்டிமடம், எடப்பாடி, பென்னாகரம், தாரமங்கலம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் அதிமுகவும் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சிக்கு இணையாக பாமகவும் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றது. 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று 27 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. இதில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமகவினர் சட்டப்பேரவைக்கு சென்றனர். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வெற்றி பெற்று பாமகவினர் சட்டப்பேரவைக்குள் சென்றனர்.
2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக, 31 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றது. குறைந்தளவில் வெற்றி பெற்றிருந்தாலும் என்றாலும் சட்டப்பேரவையில் பாமகவினர் இடம் பெற்றனர். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களம் கண்ட பாமக, எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக 1991,1996,2001, 2006, 2011 என 5 சட்டபேரவையில் இடம் பெற்ற பாமக, கடந்த தேர்தலில் இடம் பெற முடியாமல் போனது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, 23 தொகுதிகளில் களம் கண்டுள்ளது. இதில் எத்தனை தொகுதிகளில் பாமக வெற்றி பெறும் என்ற எதிர்ப்பார்ப்புக்கு நாளை விடை கிடைத்துவிடும்.

click me!