20 ஆண்டுகள் கழித்து தமிழக சட்டப்பேரவைக்குள் நுழையுமா பாஜக..? தீவிர எதிர்பார்ப்பில் பாஜகவினர்!

By Asianet TamilFirst Published May 1, 2021, 8:45 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைக்குள் 20 ஆண்டுகள் கழித்து பாஜக காலடி எடுத்து வைக்குமா என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. 
 

இந்தியாவை அசுர பலத்துடன் ஆளும் பாஜக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக உள்ளது. தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் ஆளுங்கட்சியாக உள்ளது. ஆனால், தமிழகத்தில் சட்டப்பேரவைக்குள் பாஜக செல்ல முடியாமல் தவித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை இரண்டு முறை மட்டுமே சட்டப்பேரவையிக் பாஜக இடம் பெற்றுள்ளது. முதன் முறையாக 1996-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக கன்னியாகுமரி மாவட்டத்தில் பத்மநாபபுரம் தொகுதியில் வேலாயுதம் என்பவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2001-ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றது. அப்போது 21 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டது. இதில் மயிலாப்பூர் (கே.என்.லட்சுமனன்), தளி (முரளிதரன்),  மயிலாடுதுறை (ஜெக.வீரபாண்டியன்),  காரைக்குடி (ஹெச்.ராஜா)  என 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2006, 2011, 2016 என மூன்று தேர்தல்களில் தனித்தும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் பாஜக போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெறவில்லை.
இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் சட்டப்பேரவைக்குள் இடம் பெற்றுவிட வேண்டும் பாஜக தீவிர முனைப்பு காட்டியது. 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, எப்படியும் இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெற்றி பெறா வேண்டும் என்று தீவிரம் காட்டிவருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் இருப்பதால், வெற்றி கிடைக்கும் என்று பாஜக உறுதியாக எண்ணுகிறது. எல்.முருகன்(தாராபுரம்), ஹெச்.ராஜா (காரைக்குடி), வானதி சீனிவாசன் (கோவை மேற்கு), அண்ணாமலை (அரவக்குறிச்சி), குஷ்பூ (ஆயிரம் விளக்கு), நயினார் நாகேந்திரன் (நெல்லை) போன்ற தொகுதிகளில் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் போட்டியிட்டதால், பலரும் வெற்றி பெறுவார்கள் என்று பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர். 20 ஆண்டுகள் கழித்து பாஜகவின் கனவு பலிக்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.

click me!