நம்மை தலிபான்கள் சோதித்து பார்ப்பதா..? ஆப்கனுக்கு இந்திய ராணுவத்தை அனுப்புங்க.. கொந்தளிக்கும் கிருஷ்ணசாமி.!

By Asianet TamilFirst Published Aug 20, 2021, 10:29 PM IST
Highlights

தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கானிலுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது என்பதுமே அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும் என்று புதிய தமிழக கட்சி நிறுவனர் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேச நாடுகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் தங்களது படைகளை விலக்கிக் கொள்ளும் என்று ஜோ பைடன் அறிவித்த பிறகு, தலிபான்களின் காபூலை நோக்கிய முன்னேற்றம் வேகம் எடுத்தது. 15 தினங்களுக்கு முன்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதியே தலிபான்கள் காபூலைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் பின்பலத்தோடு பிரதமராக இருந்த அஷ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானின் நிலை ஒவ்வொரு நாளும் மோசமாகிக் கொண்டு வருவதை இந்திய அரசு மிகவும் எச்சரிக்கையுடன் கவனித்து வந்ததாகவே நாம் கருதினோம்.
மத்திய அரசு ஜூலை மாதம் நான்காவது வாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பலரை இரவோடு இரவாகத் தனி விமானத்தில் அழைத்து வந்தது. ஆனால், அன்று அழைத்து வரப்பட்டவர்களில் பலர் உயர் அதிகாரிகள் மட்டுமே. இந்திய அரசின் அனுமதியுடன் அங்கு பணியாற்றச் சென்ற மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் எனப் பலரும் இன்று வரை இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரப்படாததும், அதனால் அவர்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் வரும் செய்திகள் நமக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்தியத் தூதரக உயர் அதிகாரிகளை அழைத்து வந்ததை போன்ற துரித நடவடிக்கைகளைத் தொடர்ந்திருந்தால் இதுபோன்ற ஒரு சிக்கலான சூழல் வந்திருக்காது.
கடந்த 20 வருடமாக மிக மிகப் பின்தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நாடாளுமன்றம், பெரிய நூலகம், மிகப்பெரிய அணைக்கட்டு போன்ற கட்டமைப்புகளையெல்லாம் உருவாக்கித் தந்ததை சிறிதும்கூட எண்ணிப் பார்க்காமல் காந்தகார் மற்றும் காபூலில் பூட்டிக்கிடந்த இந்தியத் தூதரகங்களைக்கூட ஒவ்வொரு அங்குலமாகச் சோதனையிட்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் இந்திய மக்களிடத்தில் பெரும் கோபத்தை உண்டாக்குகிறது. நகரின் பல பகுதிகள்; காபூல் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியத் தூதரக குடியிருப்புகளிலிருந்து கூட இந்தியர்களை காபூல் விமான நிலையத்திற்கு அழைத்து வர முடியாத அளவிற்கு அங்கே தலிபான்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக இருக்கின்றன.
நேற்றைய தினம் இந்தியர்களை அழைத்து வரச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வெறும் 40 இந்தியர்களோடு மட்டுமே திரும்பி வந்திருக்கிறது. இன்னும் எத்தனை இந்தியர்கள் ஆப்கானில் சிக்கித் தவிக்கிறார்கள் என்ற புள்ளி விவரம் கூட நம்மிடம் சரியாக இல்லை. இப்பொழுது காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டிலிருந்தாலும் காபூல் நகரம் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிற காரணத்தினால் எவரும் எளிதில் விமான நிலையத்தை நெருங்க முடியாத நிலை இருக்கிறது. பத்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க பத்து மணி நேரமும், சில தருணங்களில் ஒரு நாள் கூட ஆகிவிடுவதாகவும் சொல்கிறார்கள். காபூல் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆப்கான் மக்களுக்கும் தலிபான்களுக்கும் நடைபெறும் மோதல்கள், அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகள் போன்ற மிக ஆபத்தான நிலை அங்கு உருவாகி இருக்கிறது. இந்நிலையில் ஆப்கானில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் ’நிலைமை’ என்னவாகுமோ? என்ற அச்சம் எல்லோரிடமும் எழுந்திருக்கிறது.
காபூல், காந்தகார் உள்ளிட்ட அனைத்து ஆப்கான் பகுதிகளிலும் சிக்கித் தவிக்கக் கூடிய இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்புடன் உடனடியாக அழைத்து வர வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. தேவைப்பட்டால் நமது ராணுவத்தையும் ஆப்கானிஸ்தானில் இறக்குவதற்குக் கூட இந்தியா தயங்கக் கூடாது. இது ஆப்கான் இந்தியர்களின் பாதுகாப்பு பிரச்சினை மட்டுமல்ல, 140 கோடி இந்திய மக்களின் கௌரவப் பிரச்சினையும் கூட. இந்தியாவின் கௌரவத்தை தலிபான்கள் எவ்விதத்திலும் சோதித்துப் பார்க்க அனுமதித்து விடக் கூடாது. ஜனநாயக ரீதியாக அமைந்த அரசுகளிடம் பேசுவதைப் போன்ற மெல்லிய அணுகுமுறைகள் அடிப்படைவாத தலிபான்களிடம் எவ்வித பலனையும் தராது.


எனவே, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மிகவும் துரிதப்படுத்த வேண்டும்; அதே சமயத்தில் தலிபான்களிடத்தில் இந்தியா சிறிதும் இரக்கம் காட்டாது என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வகையில் தலிபான்களை மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்; தேவைப்படும் பட்சத்தில் உரிய அவசர அதிரடி இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆப்கானிலுள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு தயங்கக் கூடாது என்பதுமே அனைத்து இந்திய மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.” என்று அறிக்கையில் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

click me!