அதிமுகவில் சசிகலா சேர்ப்பா? ஓபிஎஸ் பேட்டியால் அதிர்ந்துபோன இபிஎஸ்..!

By vinoth kumarFirst Published Oct 25, 2021, 2:00 PM IST
Highlights

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. 

அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் தண்டனை முடிந்து விடுதலையானார். இதனையடுத்து, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனையடுத்து, அவ்வப்போது தொண்டர்களிடம் சசிகலா பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் சசிகலாவுடன் பேசும் தொண்டர்கள் அவரை தலைமையேற்க வருமாறு அழைக்கிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம் ஆகியோர் அதிமுகவை பற்றி பேசுவதற்கோ உரிமை கொண்டாடுவதற்கோ சசிகலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. சசிகலாவிடம் பேசுபவர்கள் அமமுகவினர் தானேயொழிய அதிமுகவினர் அல்ல என திட்டவட்டமாக கூறி வருகின்றனர். 
 

இந்நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அணிவிக்கும் தங்கக்கவசத்தை தேவர் குடும்பத்தினரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அதிமுகவின் திட்டங்களை நிறுத்தாமல் திமுக அரசு தொடர வேண்டும் நிறுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்.  சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது என்பது மக்களின் விருப்பம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. 

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது என விமர்சனம் செய்துள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் ஓபிஎஸ் பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!