‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையா? ஆணையத்தை அல்லு தெறிக்கவிட்ட அப்பல்லோ டாக்டர்களின் ‘பகீர்’ வாக்குமூலம்!

Asianet News Tamil  
Published : May 10, 2018, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையா? ஆணையத்தை அல்லு தெறிக்கவிட்ட  அப்பல்லோ டாக்டர்களின் ‘பகீர்’ வாக்குமூலம்!

சுருக்கம்

Will Jayalalitha be treated in Ramana film style

‘ரமணா’ பட பாணியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா? ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் விசாரணை ஆணையத்துக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். ஜெயலலிதா அப்பல்லோவில்  அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த 20 டாக்டர்களின் பட்டியலை சசிகலா ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த டாக்டர்களிடம் தற்போது ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த பட்டியலில் இடம்பெற்ற அப்பல்லோ மருத்துவர் ஜெயஸ்ரீகோபால் மற்றும் டாக்டர் ராமச்சந்திரன்(இருவரும் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு டாக்டர்கள் ஆவர்) ஆகியோரிடம் நேற்று முன்தினம் ஆணையம் விசாரணை நடத்தியது.

சசிகலா அளித்த பட்டியலில் இடம்பெற்றிருந்த அப்பல்லோ மருத்துவமனையில் சர்க்கரை நோய் தடுப்பு சிறப்பு மருத்துவராக பணியாற்றி வரும் சாந்தாராமிற்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு அவர் ஆணையத்தில் ஆஜரானார்.

ஜெயலலிதாவுக்கு எந்த ஆண்டு முதல் சிகிச்சை அளித்து வருகிறீர்கள்?, ஜெயலலிதாவுக்கு என்னென்ன உடல்நிலை பாதிப்பு இருந்தது?, உங்களது சிகிச்சையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததா? என்பது போன்று நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டதற்கு. டாக்டர் சாந்தாராம், ‘2000-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்தேன்.

அப்போது சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை. என்னை ஏன் அழைக்கவில்லை என்பது எனக்கு தெரியாது. எனக்கு பின்னர், டாக்டர்  ஜெயஸ்ரீகோபால் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிப்பதாக கேள்விப்பட்டேன்.

2015-ம் ஆண்டுக்கு பின்னர் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். நான் அப்பல்லோவில் பணியாற்றியபோதும், ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை’ என பதிலளித்தார்.

‘தொடர்ந்து 14 ஆண்டுகள் நீங்கள் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளித்து இருந்ததால் அவரது உடல்நிலை குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும். அப்படி இருக்கும்போதும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் ஏன் உங்களை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவில் சேர்க்கவில்லை’ என்று சாந்தாராமிடம் நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, தனக்கு அதுபற்றி தெரியாது என்று டாக்டர் சாந்தாராம் பதில் அளித்துள்ளார்.

தொடர் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது குறித்து கேள்வி எழுப்பிய ஆணையம், அதுபோன்று திடீர் மாரடைப்பு ஏற்படும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கேள்வி எழுப்பியது.

அதற்கு டாக்டர் சாந்தாராம், ‘அதிக ரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டம் நின்று விடும். சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், மூளை செயல் இழந்து விடும். மீண்டும் இதயம் செயல்பட்டால் எல்லா உறுப்புகளும் செயல்படும். ஆனால், ஜெயலலிதாவுக்கு இதயம் மீண்டும் செயல்படவில்லை’ என்று கூறி உள்ளார்.

மேலும், ரத்த ஓட்டம் நின்றபின்பு கொடுக்கப்படும் மருந்துகள் செயல்படுமா? என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். டாக்டர் சாந்தாராமிடம் ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி குறுக்கு விசாரணை செய்தார். அதேபோன்று சாந்தாராமிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக சசிகலா தரப்பு வக்கீல் ராஜ்குமார் பாண்டியன் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்டார்.

அப்பல்லோ நிர்வாகம் ஆணையத்தில் தாக்கல் செய்த ஜெயலலிதா சிகிச்சை குறித்த மருத்துவ ஆவணங்களில், 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போது ஜெயலலிதாவுக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஜெயலலிதாவுக்கு அன்று மாலை 4.20 மணிக்கு இருதய அடைப்பு ஏற்பட்டதும், மீண்டும் இதயத்தை செயல்பட வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது என்பதும் அப்பல்லோ டாக்டர்களின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இருதய அடைப்பு ஏற்பட்டதும் ரத்த ஓட்டம் நின்று விடும் என்ற சூழ்நிலையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதாக அப்பல்லோ மருத்துவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு இருப்பது ஆணையத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், ஜெயலலிதாவுக்கு இருதய அடைப்பு ஏற்பட்ட பின்பு விஜயகாந்த் நடித்த ரமணா படத்தில் இறந்தவருக்கு பல நாட்களாக பரபரப்பாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சி இடம்பெறும் அதேபோல ஜெயலலிதாவிற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது. இதை அடுத்தடுத்து ஆஜராகும் டாக்டர்கள் மூலம் உறுதி செய்ய ஆணையம் முடிவு செய்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேமுதிக யாருடன் கூட்டணி? 'முடிவெடுத்து விட்டேன்'.. ஆனால்?? சஸ்பென்ஸ் வைத்த பிரேமலதா! முக்கிய அறிவிப்பு!
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் மத்திய பட்ஜெட் தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!