
ஹெச். ராஜா போன்றவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களைப் போன்றவர்கள் துணை வேந்தரை நியமித்தால், அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்று மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் செயலுக்கு வரவேற்பு
பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க திருவள்ளூர் மாவட்டத்துக்கு வந்த மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் கட்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்தும் கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். அதேபோல் கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற உள்ளது. அதுதொடர்பாகவும் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசித்தோம். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை மாநில அரசே நியமித்துக் கொள்ளலாம் என்கிற சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ள தமிழக அரசின் செயல் வரவேற்கத்தக்கது.
ஹெச். ராஜாவுக்கு தகுதி இருக்கிறதா?
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் மாநில அரசுகளே பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கின்றன. அதுபோல் தமிழகத்திலும் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்பது வரவேற்புக்குரியது ஒன்று. பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா ஆளுநர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் உள்ளவர் என அண்ணாமலை கூறியிருப்பது ஏற்கத்தக்கது. அவருக்கு ஆளுநர் ஆவதற்கு தகுதி உள்ளதா? ஹெச். ராஜா போன்றவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் அவர்களைப் போன்றவர்கள் துணை வேந்தரை நியமித்தால், அவர்கள் பாஜகவை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். எனவேதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்.” என்று துரை வைகோ தெரிவித்தார்.