வரும் ஏப்ரல் 21ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் தலைமையிலான குழுவினர் இன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரிய எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். தன்னை கட்சியின் பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில் தேர்தல் ஆணையம் உரிய பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் 10 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த அவகாசம் வரும் ஏப்ரல் 21ம் தேதியுடன் நிறைவு பெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜூவ்குமார் தலைமையிலான குழுவினர் இன்று ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது