முரசொலி நிலம்: ட்விட்டர் பதிவுகளை நீக்க கெடு விதித்த திமுக... பதிவுகளை நீக்காத டாக்டர் ராமதாஸ்... வழக்கு தொடுக்குமா திமுக?

By Asianet TamilFirst Published Nov 28, 2019, 9:09 AM IST
Highlights

நோட்டீஸ் அனுப்பி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் முரசொலி நிலம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகளை டாக்டர் ராமதாஸ் இன்னும் நீக்கவில்லை. மேலும் திமுக கோரியபடி மன்னிப்பும் கோரவில்லை. எனவே, வக்கீல் நோட்டீஸில் தெரிவித்தப்படி டாக்டர் ராமதாஸ் மீது திமுக சார்பில்  நஷ்ட ஈடு கோடி வழக்கும் அவதூறு வழக்கும் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது

முரசொலி நிலம் தொடர்பாக பாமக நிறுவனர் வெளியிட்ட பதிவுகளை நீக்கி மன்னிப்பு கோர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸுக்கு திமுக வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அந்தப் பதிவுகள் இன்னும் நீக்கப்படவில்லை. எனவே திமுக சார்பில் மான நஷ்டஈடு வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பஞ்சமி நிலம் பற்றிய பேசிய ‘அசுரன்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘இது படம் அல்ல பாடம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், ‘முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம்’ என்று கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து முரசொலி நிலத்தின் பட்டாவையும் வெளியிட்டார். 
இதனையடுத்து மூலப்பத்திரம் எங்கே என்று கேட்டு டாக்டர் ராமதாஸ் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் நுழைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், தேசிய எஸ்.சி. ஆணையத்தில் புகார் அளித்தார். முரசொலி நிலம் தொடர்பாக பாஜக, பாமக, திமுக இடையே வாக்குவாதங்களும் நடைபெற்றுவந்தன. சீனிவாசனின் புகாரை விசாரிக்க எஸ்.சி. ஆணையம், முரசொலி நிர்வாக இயக்குநர் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது. உதயநிதி சார்பில் ஆஜரான முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ். பாரதி, இந்த புகாரை விசாரிக்க எஸ்.சி. ஆணையத்துக்கு உரிமை இல்லை என்று தெரிவித்தார்.


மேலும் இந்த விவகாரத்தை கிளப்பிய டாக்டர் ராமதாஸ், சீனிவாசன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்திருந்தார். இதன்படி, கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் நீலகண்டன் டாக்டர் ராமதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீசில், “முரசொலி இடம் குறித்து பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக் கூடாது. இதை தவறும்பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. மூலம் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்” எனவும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதே காரணத்துக்காக பா.ஜ.க. பொதுச்செயலாளார் சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பினார்.


ஆனால், நோட்டீஸ் அனுப்பி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் முரசொலி நிலம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட கருத்துகளை டாக்டர் ராமதாஸ் இன்னும் நீக்கவில்லை. மேலும் திமுக கோரியபடி மன்னிப்பும் கோரவில்லை. எனவே, வக்கீல் நோட்டீஸில் தெரிவித்தப்படி டாக்டர் ராமதாஸ் மீது திமுக சார்பில்  நஷ்ட ஈடு கோடி வழக்கும் அவதூறு வழக்கும் தொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல சீனிவாசன் தரப்பிலும் எந்தப் பதிலும் இதுவரை வெளியாகவில்லை.இந்நிலையில் ராமதாஸ் சார்பாக வழக்கறிஞர் கே.பாலு மூலம் திமுக அனுப்பிய நோட்ட்ஸுக்கு விளக்கமளித்து பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

click me!