என்னது அதிமுக திமுகவில் சேருமா..? நீங்க ஆறு.. நாங்கள் கடல்.. அமைச்சரை புரட்டி எடுத்த ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Feb 25, 2022, 11:52 AM IST
Highlights

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது, கட்சிக்கு ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் அக்காட்சி கட்டுக்கோப்பை இழந்து வருகிறது, ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையால் அதிமுகவை ஆளுமைமிக்க ஜெயலலிதாவை போலவோ, எம்ஜிஆரைப் போலவோ  கட்டுக்கோப்பாக வழி நடத்த முடியவில்லை. 

திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு குடும்பக் கட்சி, ஆற்றினை போன்றது, ஆனால் அதிமுக ஒரு சமுத்திரம், ஒருபோதும் எந்நாளும் அதிமுக திமுகவில் சங்கமிக்காது என ஓபன்னீர்செல்வம் கூறியுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி விரைவில் அதிமுக திமுகவுடன் இணையும் என கூறியுள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது, கட்சிக்கு ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் அக்காட்சி கட்டுக்கோப்பை இழந்து வருகிறது, ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையால் அதிமுகவை ஆளுமைமிக்க ஜெயலலிதாவை போலவோ, எம்ஜிஆரைப் போலவோ  கட்டுக்கோப்பாக வழி நடத்த முடியவில்லை. இந்நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியைக் கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. மொத்தத்தில் அதிமுக காலப்போக்கில் கற்பூரம் போல கரைந்து வருகிறது என்ற விமர்சனமும் அக்காட்சியின் மீது எழுந்துள்ளது.

ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை அதிமுகவை தவறாக வழிநடத்துகிறது, அதுதான் தோல்விக்கு காரணம் என்று  பலரும் பொருமி வருகின்றனர். இந்நிலையில்தான் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி அதிமுக என்ற கட்சி எதிர்காலத்தில் இருக்காது என்றும் அது திமுகவுடன் சங்கமித்து விடும் என்றும் கூறியுள்ளார்.  இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாக  அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- கூட்டணி பலத்தோடு உள்ளாட்சித் தேர்தலில் செயற்கையான வெற்றியை பெற்று விட்டு அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்காது என்றும், அது திமுகவில் சங்கமித்து விடும் என்றும் கூட்டுறவு துறை அமைச்சர் கூறியிருப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. திமுக என்பது ஒரு குடும்ப கட்சி, அது ஒரு ஆற்றினை போன்றது, ஆனால் அதிமுக மாபெரும் இயக்கம். அது சமுத்திரத்தை போன்றது.

ஆறுதான் கடலில் போய் கலக்கிறதே தவிர கடல் ஆற்றில் போய் கலக்காது என்பதை அமைச்சருக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது திமுக ஆட்சியிலிருநுதாலும் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவின் ஐக்கியமானார். அவரைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன், எஸ்.டி சோமசுந்தரம், கிருஷ்ணசாமி, குழந்தைவேலு போன்ற திமுகவின் முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமானது திமுக கூடாரமே காலியானதும் அதன்பிறகு 13 ஆண்டுகள் திமுக வனவாசம் இருந்ததையும் கூட்டுறவுத்துறை அமைச்சர் மறந்துவிட்டார் போலும், இதேபோல் சிறிய மாநகராட்சிகளையாவது அதிமுக கைப்பற்றி இருக்க வேண்டாமா என்ற ஆதங்கத்தில் அதிமுகவினர் உள்ளதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்திய வரலாற்றிலேயே மாநகராட்சிக்கான தேர்தல் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில் தான். சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்தே நற்சான்றிதழ் பெற்ற கட்சிதான் திமுக.

தேர்தல் நடைபெற்ற விதம் அதிமுகவினருக்கு நன்கு தெரியும் என்பதால் இதில் எங்களுக்கு எந்தவித ஆதங்கமும் இல்லை, பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் மயக்கமூட்டும் ஒலி, இதனால் மகிழவே கூடாது என்பதல்ல, அது முடியாத காரியம், இதனால் மயக்கம் அடைந்து விடக்கூடாது, அந்த மயக்கம் வராமல் இருக்கத்தான் புகழுரை கேட்கும்போது தூற்றுபவர்களும் உள்ளனர் என்பதையும் மறவாமல் இருக்க வேண்டும். புகழ்பவர்களே பிறகு இகழ்வார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். தற்போது அப்படிப்பட்ட மயக்கத்தில் மாண்புமிகு அமைச்சர் இருக்கிறார் அமைச்சர் அவர்கள் அண்ணாவின் பொன்மொழியை படித்துவிட்டு மயக்கத்தில் இருந்து விடுபட வேண்டும். செல்வி ஜெயலலிதா அவர்கள் குறிப்பிட்டது போல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்மையான மக்கள் இயக்கம், மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம், இன்னும் நூறாண்டு காலம் வாழ்ந்தாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும், அது ஒரு நாளும் திமுகவில் சங்கமிக்காது என்பதை அமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது.
 

click me!