
எஸ்பிஐ வங்கியின் பெண் மேலாளர் தலையில் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, அதற்கு இணையாக கணவன் மனைவிக்கு இடையேயான கருத்துவேறுபாடு மற்றும் அதனால் ஏற்படும் அடிதடி சண்டை தகராறு என குடும்ப வன்முறைகள் சமீப காலமாக பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது போன்ற குற்றங்களை தடுக்க காவல்துறை எத்தனையோ முயற்சிகளை எடுத்துவரும் நிலையிலும் அக் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
இந்நிலையில் அந்த வரிசையில் மதுபோதைக்கு அடிமையான கணவன் மனைவியின் தலையில் சுத்தியால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது. அதாவது, சென்னை பாடியை சேர்ந்தவர் மனோ பாரதி (37) இவர் கிண்டி பாரத ஸ்டேட் வங்கியில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர் அச்சுதானந்தன் என்பவரை 13 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கணவர் அச்சுதானந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மேலும் அவர் எந்த வேலைக்கும் செல்லவில்லை எனவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் கணவன் மனைவிக்கும் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அச்சுதானந்தன் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மனோ பாரதியை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இது குறித்து தகவல் கிடைத்த ஜே ஜே நகர் போலீசார் அச்சுதானந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.