தமிழக அரசு பதில் வேணும்.. வன்னியர் சமுதாயத்துக்கான 10.5% இட ஒதுக்கீடுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By Asianet TamilFirst Published Jul 2, 2021, 9:36 PM IST
Highlights

வன்னியர் சமுதாயத்துக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
 

தமிழ் நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று, பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளில் வன்னியர் சமுதாயத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த சந்தீப் குமார் மற்றும் சிவகங்கையை சேர்ந்த முத்துகுமார் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த மனு நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாமே? என கேள்வி எழுப்பினர். பின்னர், “இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தனர். அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் நாகமுத்து, “ஏற்கனவே இதே கோரிக்கை உடைய மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே இந்த வழக்கை மாற்ற வேண்டாம்” என நீதிபதிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும் அவர் கூறுகையில், “வன்னியர் சமுதாயத்துக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு செய்யப்படுவதால் குறிப்பிட்ட சமுதயத்தினருக்கு மட்டுமே கல்வி & வேலை வாய்ப்பில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உரிய கணக்கீடு இல்லாமல் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தடை விதிக்க வேண்டும்” என்று நாகமுத்து தனது வாதத்தை முன் வைத்தார். ஆனால், நீதிபதிகள், “இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். தமிழக அரசின் கருத்தையும் அறிய வேண்டும். பின்னரே முடிவு செய்ய முடியும். தற்போதைய நிலையில் எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து இந்த மனுக்கள் தொடர்பாக பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.  ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரலில் மதுரையை சேர்ந்த அபிஷ் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்களோடு இந்த மனுவையும் இணைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

click me!