
மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத்தான் காவல் துறையினர் கைது செய்ததுள்ளனர் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
மே 17 இயக்கம் சார்பில், சென்னை மெரினாவில் மே 21 ஆம் தேதி தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தடையை மீறி நிகழ்ச்சி நடத்திய திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கடசியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் நான்குபேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தங்கள் மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, திருமுருகன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், தமிழக உள்துறை செயலர், சென்னை மாநகர காவல் துறை ஆஐணயர் விஸ்வநாதன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில், திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், திருமுருகன் காந்தி குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் அங்கு போராடியதால் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார் என்று கூறினார்.
திருமுருகன் காந்தியை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் காவல் துறையினர் கைது செய்ததாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.