
ஒருவழியாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாயிற்று. டிச.21ம் தேதி தேர்தல் என்று அறிவிப்பு வரும் ஒரு நாளைக்கு முன்னர்தான், அதிமுக.,வின் அதிகார பூர்வ சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற அறிவிப்பும் வந்து சேர்ந்தது. எனவே, இரண்டுக்கும் முடிச்சு போட்டு, குய்யோ முறையோ என்று குதிக்கத் தொடங்கிவிட்டனர், எதிர்க்கட்சியினர் குறிப்பாக, டிடிவி தினகரன் ஆதரவாளர்கள். இந்த ஒரு காரணமே, அவர்களுக்கு இரட்டை இலை மீது இருக்கும் அச்சத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
இதனிடையே, இரட்டை இலை ஒன்றால் மட்டும் வெற்றி சாத்தியமில்லை என்று கூறி அதற்கான சமாதானத்தையும் சிலர் சொல்லத் தொடங்கினர். இரட்டை இலை சின்னம் ஒன்றும் தோல்வி அடையாத சின்னம் இல்லை. ஜெயலலிதாவே, 1996ல் நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் நின்று தோல்வி அடைந்தார். ஆனால் கருணாநிதியோ, உதயசூரியனில் நின்று இதுவரை தோல்வி அடையவே இல்லை என்று ஜரூராக களத்தில் இறங்கி பரப்புரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது திமுக.,வின் ஐடி., பிரிவு! அப்படி என்றால், ஏன் இரட்டை இலையைப் பார்த்து திமுக., பயம் கொள்ள வேண்டும்?
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறது திமுக. அதன் தலைவர் செயல் இழந்த நிலையில், செயல்படுவதற்காகவே செயல் தலைவர் ஆகியுள்ளார் மு.க.ஸ்டாலின். ஆனால் அவர் செயல்பாடு, தலைவரின் செயல்பாடு போல் இல்லாமல் போனது திமுக.,வின் துரதிர்ஷ்டம். ஏன் இப்படி ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள் என்றால், இன்னமும் தன்னம்பிக்கை ஏற்படாத நிலையில் ஸ்டாலின் இந்த இடைத்தேர்தலையே கூட அணுகுவதுதான்!
இரவிலே கிராமத்துச் சாலையில் செல்பவர் பயம் வந்து துணைக்கு நாலு பேரை அழைத்துச் செல்வது போல்தான் ஸ்டாலினின் செயல்பாடும். ஒரு ஆர்.கே.நகர் சிறு தொகுதி இடத்தேர்தலை எதிர்கொள்ள கூட்டணிக் கட்சிகளின் தயவை எதிர்பார்த்து நிற்கிறார்.
அப்போது, ஜெயலலிதா என்ற பெரும் பிம்பம் பின்னணியில் இருந்தது. அந்த ஒற்றைக் குரலுக்காக மயங்கிப் போய் ஓட்டுப் போட்ட எத்தனையோ பெண்களும் வயதானவர்களும் இருந்தார்கள். அந்தக் கால கட்டத்தில், எதிர் எதிர் தரப்பில் நிற்கும் பலரையும் ஒன்றிணைக்க வேண்டிய கட்டாயம் திமுக.,வுக்கு இருந்தது. அந்த பலத்தைக் காட்ட, இப்போதும் இரட்டை இலைச் சின்னத்தைக் கண்டு பயந்து ஸ்டாலின் பின்வாங்குவது விந்தைதான்!
வழக்கம் போல், சமத்துவ சரத்குமார், தன் அபிமானத்தை அதிமுக.,வில் காட்டி விட்டார். திமுக.,விற்கு ஆதரவு இல்லை. இந்த ஆட்சி 5 ஆண்டு நீடிக்க வேண்டும் என்று ஆசையை வெளிப்படுத்தி விட்டார்.
அடுத்து அதிமுக.,வுக்கு பின்னணியில் இருந்து இயக்குவதாக எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி வரும் பாஜக.,வோ இதுவரை அவர்களுக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல், தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக முதலில் கூறி, பின்னர் யாராவது வேட்பாளரை நிறுத்தலாமா என்று ஆலோசிக்கிறது.
அதிமுக.,வின் பிரதான எதிரியாகிவிட்டார் இப்போது தினகரன். அவருக்கு தான் வென்று காட்டுவதை விட, திமுக.,வுக்கு தொப்பியை அணிவிப்பதில்தான் அலாதி மகிழ்ச்சி! பார்த்தாயா ரத்தத்தின் ரத்த திலகங்களே... இவர்களால் கட்சியை வெற்றி பெற வைக்க இயலவில்லை என்று கர்ஜிக்கும் ஆசை. அதனால், தான் வெல்ல இயலாவிட்டால், திமுக.,வின் வெற்றிக்கு பாடு படப் போகும் அதிசயத்தைச் செய்யப் போகிறார் தினகரன்.
அதன்படி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து முக்கிய நிர்வாகிகளுடன் பெசண்ட் நகர் இல்லத்தில் இன்று டிடிவி.தினகரன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இதனிடையே ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற கட்சிகளும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது திமுக.,வுக்கு ஆள் சேர்க்கும் பணியை திருநாவுக்கரசர் தொடங்கி வைத்திருக்கிறார்.
இதனிடையே சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களச் சந்தித்த மதிமுக., பொதுச் செயலர் வைகோ., இடைத்தேர்தல் குறித்து டிச.3ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் கூடி முடிவு செய்வோம் என்றார். எப்போதுமே கட்சிக்கு பாதகமான முடிவை எடுப்பதில் சமர்த்தராகத் திகழ்பவர் வைகோ. ஏற்கெனவே முற்காலங்களில் எடுத்தது போல், புறக்கணிப்பு முடிவை அறிவிப்பாரா அல்லது அந்தக் கூட்டத்தில் திமுக.,வுக்கு ஆதரவு என்றோ, தனித்துப் போட்டி என்றோ அறிவிப்பாரா என்றெல்லாம் யாரும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். காரணம், அண்மைக் காலமாக, வைகோ திமுக., கொடிக்கம்பத்தில் சாய்ந்து நின்றபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
வழக்கம் போல் திருமாவளவன், திமுக ஆதரவு நிலைப்பாடை எடுத்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு விசிக ஆதரவு தரும் என்றும்,
ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆதரவு கேட்டதை தொடர்ந்து இந்த முடிவு
எடுத்ததாகவும் கூறியுள்ளார்.
சென்ற முறை இடைத்தேர்தல் வந்த போது இருந்த நிலை வேறு. இப்போது, இருக்கும் நிலை வேறு. சென்ற தேர்தல் சூழல் போல், பணம் தண்ணீராய்ப் பாயுமா என்பது சந்தேகம்தான்! தினகரன் தரப்பினர், வெற்றி எங்களுக்கே என்று முழங்க, சென்ற முறை பெற்ற காசுக்கே இப்போது தர்ம நியாயத்தின் படி வாக்களிக்க வேண்டிய கட்டாயத்தில் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், இரட்டை இலையுடன் அதிமுக., வேட்பாளர் இறங்கினாலும், தினகரன் பெறப்போகும் வாக்குகள் என்னவோ அதிமுக., ஓட்டு வங்கியின் ஒரு பகுதியைத்தான். இத்தகைய சூழலில், எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேருங்கள் என்று பழைய பல்லவியைப் பாடி, அதிமுக.,வையும் முதல்வரையும் பெரிய ஆளாக்கி பயந்து சாகிறார்கள் திமுக.,வினர் என்பதுதான் இந்த நிகழ்வுகளைப் பார்த்து கருத்து சொல்லும் எவருடைய கருத்தாகவும் இருக்கும்!
ஆனால்... அட... ஆமாம்... இரட்டை இலைன்னு சொன்னாலே... ச்ச்சும்மா அதிருதில்ல...!