
அதிமுகவில் ஆளுமைவாய்ந்த தலைமை இல்லாத சூழலில், பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து பேசி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் தலைமையில் தனி அணி செயல்பட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி நீண்ட இழுபறிக்குப் பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்தது. அதன்பிறகு, சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு ஓரங்கட்டிவிட்டு, முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையும் பெற்று விட்டனர்.
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்தாலும் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாகக் கூறப்பட்டது. அண்மையில், மைத்ரேயனின் முகநூல் பதிவும் அதை உறுதிப்படுத்தியது.
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகளுக்கு இடையேயான பனிப்போர் மேலும் வலுப்பெற்றிருப்பதை இன்றைய நிகழ்வும் வெளிச்சம்போட்டு காட்டியது. மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் பகுதியில், முப்பெரும் விழா நடைபெற்றது. இரட்டை இலையை மீட்டெடுத்தை கொண்டாடும் வகையில் இந்த விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, 100 அடி உயர கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். இந்த விழாவில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆனால், இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. பன்னீர்செல்வத்துக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் அழைப்பே விடுக்கப்படவில்லை என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ்-சிடம் ஆலோசிக்காமல் அவருக்கே தெரியாமல் இந்த விழா நடந்ததாகக் குமுறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன், மதுரையில் நடந்த விழாவிற்கு ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. கட்சியின் மாவட்ட செயலாளராகவும் அமைச்சராகவும் இருப்பவர் இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று விழாவை நடத்தியிருக்கக்கூடாது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசிக்காமல், அழைப்பு கூட விடுக்காமல், சுய விளம்பரத்திற்காக விழா நடத்தியது கண்டனத்துக்கு உரியது.
இரட்டை இலை மீட்கப்பட்டதற்காக கொண்டாடப்பட்ட விழாவாக இருந்தால், சின்னத்தை மீட்க போராடிய என்னையோ, கே.பி.முனுசாமியையோ அழைத்திருக்க வேண்டும். ஆனால், இரட்டை இலையை மீட்க டெல்லிக்கும் சென்னைக்குமாய் ஓடோடி போராடிய எங்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த விழாவை பார்த்தால், இரட்டை இலை மீட்கப்பட்டதற்காக திடீரென தயார் செய்த விழா போன்று தெரியவில்லை. கல்வெட்டு, 100 அடி உயர கம்பம் ஆகியவை ஏற்கனவே அமைக்கப்பட்டு திட்டமிட்டு நடத்தப்பட்டு விழாதான். ஆனால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை. அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஓபிஎஸ் ஆதரவாளர்கள், கட்சியில் இரண்டாம் தர குடிமக்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.
நான் முகநூலில் பதிவிட்ட கசப்பான உண்மை உண்மைதான் என்பதை இச்சம்பவம் காட்டிவிட்டது. அதிமுகவில் தற்போது ஆளுமையான தலைமை இல்லை. எனவே ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து பேசி பிரச்னைகளைக் கலைய வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வழிகாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும் என மைத்ரேயன் தெரிவித்தார்.