
குடியரசுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக கிறிஸ்தவர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும் என தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இநநேரத்தில் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும். பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பாஜக, குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும்.எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருமாவளவனின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், “பாஜகவை பொறுத்தவரை அனைத்து மதத்தினரையும் இந்தியர்களாக மட்டுமே எண்ணுகிறது. ஆனால், ஒரு மதத்தை சார்ந்தவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கூறுவதன் மூலம், தான் ஒரு மதவாதி என்பதை திருமாவளவன் நிரூபித்து விட்டார். இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு கிறிஸ்தவர் இதுவரை இல்லை என்று மதரீதியாகப் பிரித்து பார்ப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படி பார்ப்பதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்றால், நம் மக்களின் உரிமையை பறித்து 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியவர்கள் அதே கிறித்தவ மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்ற உண்மையை மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்பதை திருமாவளவன் உணர வேண்டும். மதரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் மதவாத சக்திகளை அடையாளம் கண்டு அடக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
2012ல் வட கிழக்கு மாநிலத்தை சேர்ந்த கிறிஸ்தவர் பி.ஏ.சங்மா ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டபோது மக்களவை உறுப்பினராக இருந்த திருமாவளவன் சங்மாவுக்கு வாக்களிக்கவில்லையே ஏன்? ஆதரவு தர மறுத்தது ஏன்? அப்போது ஒரு கிறிஸ்தவர் ஜனாதிபதியாக வேண்டும் என்று உருகவில்லையே, ஏன்? இப்போது கிறிஸ்தவர்கள் மீது வந்துள்ள பாசம் அப்போது இல்லாமல் போனது ஏன்? அரசியலில் மதத்தை கலக்கும் திருமாவளவனின் அறிக்கை கிறித்தவ மதத்தின் மீதான அவரின் போலி பாசத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அரசியலில் மதத்தை கலக்கும் அநாகரீக அரசியலை திருமாவளவன் கைவிட வேண்டும். திருமாவளவன் 2012ல் ஜனநாயகத்துக்கு பெருமை சேர்க்காதது ஏன்?” என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.