
சசிகலாவின் பரோல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் நடராஜனைக் காண 5 நாட்கள் பரோலில் வந்தார் சசிகலா. இன்றுடன் சசிகலாவின் பரோல் நிறைவடைவதால் இன்று பிற்பகல் மீண்டும் சிறைக்கு செல்கிறார் சசிகலா.
பரோலில் வந்த சசிகலாவை சில அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், சசிகலாவிற்கு சிறை நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளை விதித்ததால் அவரால் யாரையும் சந்திக்க முடியவில்லை.
சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து சசிகலாவின் ஒவ்வொரு நகர்வையும் தீவிரமாக கண்காணிக்குமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டார் முதல்வர் பழனிசாமி. இதையடுத்து சசிகலாவை உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்தனர்.
எனினும் சில அமைச்சர்கள் சசிகலாவின் உறவினரின் போனுக்கு தொடர்புகொண்டு சசிகலாவுடன் பேசியுள்ளனர். சில எம்.எல்.ஏக்களும் சசிகலாவுடன் பேசியுள்ளனர். ஆனால் எந்த அமைச்சரும் சசிகலாவைச் சந்திக்கவில்லை.
பரோல் முடிந்து சென்னையிலிருந்து சிறைக்கு கிளம்பும் சசிகலாவை, அவர் கிளம்பும்போது சில அமைச்சர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமிக்கு உளவுத்துறை தகவல் கொடுத்துள்ளது. சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த முதல்வர் பழனிசாமி, அந்த சந்திப்பைத் தடுப்பதற்காக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் சசிகலா சென்னையிலிருந்து கிளம்ப உள்ள நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்திவருகிறார் முதல்வர் பழனிசாமி.
இப்போ தெரிகிறதா? அமைச்சரவைக் கூட்டம் ஏன் கூட்டப்பட்டது என்று?