
சசிகலாவிற்கு வழங்கப்பட்ட பரோல் இன்றுடன் நிறைவடைவதை அடுத்து இன்று பிற்பகல் சென்னையிலிருந்து கிளம்பி சசிகலா சிறைக்கு செல்கிறார்.
உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனைக் காண 5 நாட்கள் சசிகலா பரோலில் வந்தார். கடந்த 7-ம் தேதி முதல் இன்றுவரை சசிகலாவிற்கு பரோல் வழங்கப்பட்டிருந்தது. இன்றுடன் பரோல் முடிவடைகிறது.
பரோலில் வந்த சசிகலாவை சில அமைச்சர்கள் நேரில் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், சிறை நிர்வாகம் விதித்த கடுமையான நிபந்தனைகளினால், அமைச்சர்கள் யாரும் சசிகலாவை சந்திக்கவில்லை. ஆனால் சில அமைச்சர்கள், சசிகலாவின் உறவினர் போனுக்கு தொடர்புகொண்டு சசிகலாவிடம் பேசியுள்ளனர். சில எம்.எல்.ஏக்களும் சசிகலாவிடம் பேசியுள்ளனர்.
பரோலில் வந்த 5 நாட்களில் கட்சியில் பெரிய மாற்றங்களை செய்துவிட முடியாவிட்டாலும் கட்சியினர் மத்தியில் தனக்கு இருக்கும் ஆதரவை சசிகலா புரிந்துகொள்ள இந்த பரோல் வழிவகுத்துள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.