வலிமைமிக்க தலைவரான சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் விசிக சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், சித்தராமையாவை பிரதமராக வர வேண்டும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திருமாவளவன் பேசுகையில், “பாஜக விசிக, காங்கிரஸ் கட்சிகளுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கு எதிரான கட்சி. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவது ஆபத்தானது. இதை இன்னும் பெரும்பான்மை இந்து சமூகம் உணராமல் இருக்கிறது. இந்து சமூகத்துக்கும் எதிரானதுதான் பாஜக. பாஜகவின் உண்மையான எதிரியே அரசியலமைப்பு சட்டம்தான். பாஜக எண்ணம் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் அச்சட்டத்தில் கூறப்பட்டு இருப்பவைதான்.
இதையும் படிங்க: ஹிட்லர் அமைச்சர்கள் போலவே இந்தியாவிலும் பொய் சொல்லும் அமைச்சர்கள்.. சென்னையில் பொளந்துகட்டிய சித்தராமையா!
தற்போது கருத்தியலுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவேதான், சித்தராமையா போன்ற தலைவர்கள் நாட்டுக்கு தேவைப்படுகிறார்கள். யாரும் செய்யாத சாதனையைப் படைத்து இந்த விருதை சித்தராமையா பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற சித்தராமையா ஏன் பிரதமராகக் கூடாது? அவருக்கென ஒரு தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இதை நான் சர்ச்சைக்காகக் கூறவில்லை. சித்தராமையா வலிமைமிக்க ஒரு தலைவர். அப்படிப்பட்ட பார்வை உள்ளவர்கள்தான் அதிகாரத்தில் அமர வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திருமாவளவன் செயல்படுகிறார் என என்னை விமர்சித்தாலும், காங்கிரஸுடன் இணைந்துதான் தீயசக்திகளை அழிக்க வேண்டும்.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் - இபிஎஸ் அழைப்பு.. செம ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்!
பாஜக இந்துக்களுக்கான அரசு அல்ல. அதானி, அம்பானிக்கான அரசு ஆகும். ஆர்எஸ்எஸ் பார்வையில் மோடி, அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆகியோர்கூட தாழ்த்தப்பட்டவர்கள்தான். அவர்கள்தான் பாஜகவை எதிர்த்து போராட வேண்டும். எனவே, மீண்டும் பாஜகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பது ஜனநாயக சக்திகளின் கடமை ஆகும். நாட்டில் இரு அணிகள் மட்டுமே இருக்க வேண்டும். மூன்றாவது அணி வேண்டாம். தமிழகத்தில் எங்களால் பாஜகவை தோற்கடிக்க முடியும். அதிமுகவுடன் இருப்பதால் இங்கு காலூன்ற முடியும் என பாஜக நினைக்கிறது.
எங்களுக்கு பதவிக்கு வருவது நோக்கம் அல்ல. நாட்டையும் மக்களை காக்க வேண்டும் என்பதே நோக்கம். மக்களை காப்பதற்கான ஆயுதம்தான் சட்டம். அதை நாம் பாதுகாக்க வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நள்ளிரவு நேரத்தில் சட்டத்தை மாற்றிவிட்டோம் என அக்கட்சி சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அவர்கள் அதை செய்ய தயங்கமாட்டார்கள். பாஜகவை காங்கிரஸ் கட்சி இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. தேசிய அளவில் காங்கிரஸுடன் இணைந்துதான் பாஜகவை வீழ்த்த முடியும்.” என்று திருமாவளவன் பேசினார்.
இதையும் படிங்க: செஸ் போஸ்டர் விவகாரம்.. மோடிக்கு அவமரியாதை.. தமிழர்களுக்கு அவமானம்.. ஸ்டாலின் அரசு மீது சீமான் ஆவேச அட்டாக்!