​விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை..! துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து! ரஜினியின் திட்டம் என்ன?

By Selva KathirFirst Published Sep 5, 2020, 11:44 AM IST
Highlights

கடந்த மாதம் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத நடிகர் ரஜினிகாந்த், திமுகவின் பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ள துரைமுருகன், பொருளாளராகியுள்ள டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை அறிவித்த பிறகு பெரும்பாலும் அனைத்து விழாக்கள், பண்டிகைகளுக்குவாழ்த்து தெரிவித்து வருகிறார். இதே போல் முக்கியமான சம்பவங்கள் தொடர்பாகவும் தனது கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக கூறி வருகிறார். கொரோனாவிற்கு முன்பு வரை குறிப்பிட்ட இடைவெளியில் செய்தியாளர்களையும் ரஜினி சந்தித்து வந்தார். ஆனால் கொரோனா பேரிடருக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. மேலும் கொரோனாவை காரணம் காட்டி அரசியல் கட்சி திட்டத்தை ஒத்திப்போட ரஜினி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

கடைசியாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனக்கு முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்றும் தகுதியான ஒரு நபரை முதலமைச்சராக்க தனது கட்சி செயல்படும் என்றும் இதற்கு தனது கட்சி நிர்வாகிகள் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். ரஜினியின் இந்த பேச்சை அவரது ரசிகர்களே யாரும் ரசிக்கவில்லை. மேலும் இனி ரஜினி கட்சி ஆரம்பிக்கமாட்டார் என்று அவரது ரசிகர்களில் சிலர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். தேர்தலுக்கு ஓராண்டுகள் இருந்த போதே கட்சி ஆரம்பிக்காதவர் இனி எப்படி ஆரம்பிப்பார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

இதனை உண்மையாக்குவது போல் ரஜினியும் அரசியல் தொடர்பான எவ்வித ஆர்ப்பரிப்பும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறார். இதனால் ரஜினியிடம் அரசியல் கட்சி ஆசை தீர்ந்துவிட்டது என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால் ரஜினிக்கு அரசியல் ஆலோசனைகள் வழங்கி வரும் தமிழருவி மணியனோ, நிச்சயமாக ரஜினி அரசியலுக்கு வருவார், முதலமைச்சர் ஆவார் என்று அண்மையில் பேட்டி கொடுத்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு சில வகைகளில் ஆறுதல் அளித்தது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியன்று ரஜினி வாழ்த்து தெரிவிக்காதது அவரது ரசிகர்களை சோர்ந்து போக வைத்தது.

ஏனென்றால் ஆன்மீக அரசியல் என்று கூறி வரும் தலைவர் இந்துக்களின் மிக முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெ ரிவிக்கவில்லையே என்று அவரது ரசிகர்கள் ஏக்கம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் திடீரென நடிகர் ரஜினி யாருமே எதிர்பாராத வகையில் திமுக பொதுச் செயலாளராக தேர்வாகியுள்ள துரைமுருகனுக்கும், பொருளாளராக தேர்வாகியுள்ள டி.ஆர்.பாலுவுக்கும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். இது திமுகவினர் மட்டும் அல்ல ரஜினி ரசிகர்களே கூட எதிர்பாராத நகர்வு என்கிறார்கள். இப்படித்தான் எதையும் யாரும் எதிர்பாராத நேரத்தில் செய்யக்கூடியவர் ரஜினி.

ஆன்மிகம் தொடர்பான நிகழ்வில் மவுனம் காத்த ரஜினி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வில் தனது வாழ்த்துகளை தெரிவித்திருப்பதன் மூலம் தனது அரசியல் பயணம் முடிந்துவிடவில்லை என்பதை தெரிவிக்கவே துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக சொல்கிறார்கள். நடிகர் ரஜினியும் துரைமுருகனும் நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும் அவ்வப்போது பேசிக் கொள்ளக்கூடியவர்கள். கலைஞர் வீட்டுக்கு ரஜினி வந்து செல்லும் போதெல்லாம் துரைமுருகனுடன் ரஜினி பேசி சிரித்துவிட்டு செல்வார். இதே போல் துரைமுருகனும் அவ்வப்போது ரஜினி வீட்டிற்கு செல்வதுண்டு.

இப்படி நண்பராக இருக்கும் துரைமுருகன் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்வானதும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பியிருந்தால் ரஜினி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறியிருக்கலாம். ஆனால் அனைவருக்கும் தெரியும் வகையில் ரஜினி தனது வாழ்த்துகளை கூற சமூக வலைதளத்தை தேர்வு செய்திருப்பது தான் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. ரஜினி தனது அரசியல் எதிரியாக கருதுவது திமுகவைத்தான். ரஜினி இனி அரசியலுக்கு வரமாட்டார் என்று பிரச்சாரம் செய்வதும் திமுகவினர் தான். 

 

இதையும் படிங்க: ஆபாச உடையில் பயிற்சி... பார்க்கில் ‘கோமாளி’ பட நடிகையை தாக்க முயன்ற கும்பல்... பகீர் வீடியோ...!

அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதில்அளிக்கும் வகையில் இன்னும் தனது அரசியல் பயணம் உயிர்ப்புடன் உள்ளது, அரசியல் நகர்வுகளை நான் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பதை தெரிவிக்கவே ரஜினி துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவிற்கு கூறிய வாழ்த்துகளை பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள். இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்ன என்றால், ரஜினி இருவருக்கும் வாழ்த்து கூறிய நிலையில், இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை ரஜினிக்கு நன்றி கூறப்படவில்லை என்பது தான். இதன் மூலமே இந்த வாழ்த்தில் அரசியல் இருப்பதை தெரிந்து கொள்ளலாம். இனி தேர்தல் வரை ரஜினி இப்படி யாரும் எதிர்பாராத அதிரடிகளை அரங்கேற்றிக் கொண்டே தான் இருப்பார்.

click me!