புதுச்சேரிக்குப் பதிலாக சென்னை - ராமேசுவரம் - கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சுற்றுலா போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 4- ஆம் தேதி அன்று 'கோர்டிலியா குரூஸ்' என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் விசாகப்பட்டினம், புதுச்சேரிக்கு சொகுசுக் கப்பலில் பயணிக்கும் திட்டத்தை சென்னை துறைமுகத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பலில் கேசினோ சூதாட்டங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின. இந்நிலையில் சென்னையிலிருந்து புறப்பட்டு விசாகப்பட்டினம் சென்று விட்டு புதுச்சேரிக்கு கப்பல் வந்தது. ஆனால், புதுச்சேரிக்கு வர அந்த யூனியன் பிரதேச அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால், சொகுசுக் கப்பல் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. இந்நிலையில் இதுதொடர்பாக ராமநாதபுர எம்.பி.யும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியைச் சேர்ந்தவருமான நவாஸ்கனி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரி அரசு அனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்திற்கு உட்பட்ட தென் மாவட்ட சுற்றுலாத் தலங்களான ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சொகுசு கப்பலைத் தொடங்க வேண்டும். தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சொகுசு சுற்றுலா கப்பல் பயணத்தைத் தொடங்குவதன் மூலம் என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட தென் மாவட்ட பகுதிகளில் சுற்றுலாத் துறை மேம்பட பயனுள்ளதாய் அமையும். எனவே, இதுகுறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ராமேசுவரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்னையில் இருந்து சொகுசு கப்பல் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்துள்ளார்.