தமிழகத்தில் ஆளுங்கட்சியாக பாஜக செய்ய வேண்டியதை செய்து வருகிறது.. கேப் விடாமல் நொறுக்கும் அண்ணாமலை!

By Asianet TamilFirst Published Jun 13, 2022, 8:32 PM IST
Highlights

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வருவதற்கும், மக்கள் மனதை வெல்வதற்கும் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பாஜக செய்துகொண்டு வருகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மேகதாது அணை விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுக்க எந்த அதிகாரமும் கிடையாது.  மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்றால் தமிழகத்தின் அனுமதி நிச்சயமாக தேவை. அதற்கு தமிழகம் அனுமதி வழங்கப்போவதில்லை. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை பாஜக ஆதரிக்கும். எதிர்க்கட்சி அந்தஸ்து என்பது மக்கள் அளிக்கும் வாக்களிப்பதன் மூலம் கிடைக்கக்கூடியது. 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை பொதுமக்கள் அளித்துள்ளனர். அதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. 

அதிமுகவுடனோ அல்லது மற்றொரு கட்சியுடனோ எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பாஜவுக்கு கிடையாது. பாஜக தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியாக வருவதற்கும், மக்கள் மனதை வெல்வதற்கும் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் பாஜக செய்துகொண்டு வருகிறது. திமுக அரசு பேசும் எல்லா விஷயங்களுமே பாஜகவுக்கு எதிராகத்தான் உள்ளது. கருத்தியல் அடிப்படையில்தான் தமிழக அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் மக்கள் இரு பக்கங்களை முடிவு செய்கிறார்கள்ர். நீட் தேர்வு, புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட பல விஷயங்களில் தமிழகத்தில் முக்கிய கட்சிகள் ஒரு பக்கம் உள்ளன. 

பாஜக மட்டும்தான் எதிர்பக்கத்தில் உள்ளது. அதிமுகவுடன் ஒப்பிடுவதற்கோ சண்டை போடுவதற்கோ நாங்கள் சொல்லவில்லை. கருத்தியல் அடிப்படையில் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருப்பது பாஜகதான். பாஜகவை திமுகவினர்தான் செயல்பட வைக்கிறார்கள். திமுக கூறும் எல்லாவிதமான பொய்களையும் ஆதாரத்தின் அடிப்படையில் மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்து வைத்து வருகிறோம். இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளர வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் கிடையாது. பாஜக இங்கே வளர நிறைய வாய்ப்புகளை மக்கள் அளித்து வருகிறார்கள்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

click me!