
கொரோனா மற்றும் ஒரு மைக்ரான் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை அண்ணாசாலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு தன் கையால் முககவசம் அணிவித்து அறிவுரை கூறினார். வைரஸ் தொற்று வேகமாக பரவுவதால் முகக்கவசம் அணியாமல் யாரும் வெளியில் வர வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது சாலையில் நடந்து சென்ற இளைஞர்களிடம் ஏன் முகக் கவசம் அணிய வில்லை என்று கேள்வி எழுப்பிய அவர் அவர்களுக்கு முகக்கவசம் வழங்கியதுடன், அங்கிருந்த சிறுமிகளுக்கு தன்கையால் முகக்கவசம் அறிவித்து அறிவுரை கூறினார். இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளிகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற முடிவுடன் ஒட்டுமொத்த நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவில் இரண்டுக்கு நான்கு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி தன்னை தகவமைத்து கொண்டு வருகிறது. முதலில் டெல்டா வைரசாக உருமாறிய கொரோனா தற்போது ஒமைக்ரானாக உருவாகியுள்ளது. இந்த வகை வைரஸ் டெல்டாவகையை காட்டிலும் மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாடுமுழுவதும் 1525 பேருக்கு ஒமைக்ரான் தோற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 460 பேர் மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 350 பேர் இந்தவகை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரானுக்கு மத்தியில் கொரோனா வைரசும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரே நாளில் நாடு முழுவதும் புதிதாக 27 ஆயிரத்து 553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களும், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் அதிகரித்து வரும் நோய்களை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத் துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே நிலையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பரிசோதனைகளை அதிகரிப்பது, முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்டவைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்தும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது, மருத்துவ படுக்கை வசதிகளை மேம்படுத்துவது, ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள. அதே நேரத்தில் தற்போது உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது மற்றும் உணவகங்கள் கடைகளுக்கான நேரத்தை குறைப்பது. சனி ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் வழிபாட்டு தளங்களுக்கு தடை விதிப்பது.
வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது போன்றவை குறித்தும் சுகாதாரத்துறை வல்லுநர்கள் முதலமைச்சருக்கு பரிந்துரைகளை முன் வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்று மாலை அல்லது இன்னும் ஒருசில தினங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் ஈடுபட்டு வருகிறார். சென்னை மற்றும் வட மாவட்டங்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முககவசம் அணியவேண்டும், தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதே நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ள அவர், தயவுசெய்து பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக் கவசம் அணிந்து கொண்டு வெளியில் வாருங்கள் உங்கள் வீட்டில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன் என அப்போது நெகிழ்ச்சியுடன் வேண்டுகோள் வைத்தார்.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அவரது இல்லத்திற்கு செல்லும் வழியில் அண்ணாசாலையில் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், அப்போதும் அங்கு முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கு ஏன் நீங்கள் முகக்கவசம் அணியவில்லை.? என கேட்டதுடன் அவர்களுக்கு முகக் கவசங்களை வழங்கி, கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். அங்கிருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர் சிறுமியர்களுக்கு அவர் தான் வைத்திருந்த முகக்கவசத்தை அணிவித்து அறிவுரை வழங்கினார். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் யாரும் முகக் கவசம் அணியாமல் வெளியில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அண்ணா சாலை பகுதியில் நடந்து சென்று பொது மக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விட்டு பின்னர் இல்லத்திற்கு சென்றார். முதலமைச்சரே சாலையில் இறங்கி முகக் கவசம் அணிய வேண்டும் என பொதுமக்களுக்கு வலியுறுத்தியது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதற்கான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.