அன்புமணியை மேடையில் 'அடேய் ' என்று பேசுவாரா ராமதாஸ்.. மா.செ க்கள் கேவலமா.? கொதிக்கும் குரு மருமகன்.

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2022, 2:16 PM IST
Highlights

முத்துகிருஷ்ணன் நன்கு படித்த வழக்கறிஞர். அவரது தந்தை சண்முகம் வன்னியர் சங்கத்திற்கு பல தியாகங்களை செய்தவர், அதற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் இப்போது மாவட்ட கவுன்சிலராகவும் இருக்கிறார், அந்த பதவிக்காவது அவர் மரியாதை கொடுத்திருக்க வேண்டும். இப்படி எவரையுமே மரியாதை இல்லாமல் நடத்துவது ராமதாஸின் வாடிக்கையாகிவிட்டது.

சொந்த சமூகத்தையே  பாமக நிறுவனர் ராமதாஸ் மிக இழிவாக மேடைகளில் பேசி வருகிறார் என்றும், மாவட்ட செயலாளர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசும் அவர் தனது மகன் அன்புமணி ராமதாசை ' அடேய் ' என்று மேடையிர் பேசுவாரா என காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் பேச்சால் பல நிர்வாகிகள் மன உளைச்சலில் இருந்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

வன்னிய மக்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின் மூலம் சமூக நீதி அரசியல் தலைவராக அறியப்பட்டவர் ராமதாஸ். அதன்மூலம் 1989 ஆம் ஆண்டு பாமக என்ற கட்சியை நிறுவி தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் அவர்.  வடமாவட்டங்களில் வன்னியர்கள் பரவலாக வசிக்கும்  பகுதிகளில் தனக்கென தனி செல்வாக்கை உருவாக்கி வைத்துள்ளது அவர் நிறுவிய பாமக. இதன் மூலம் கடந்த காலங்களில் அதிமுக- திமுக என இரண்டு  கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி வைத்து தனது அரசியல் ஆளுமையை தக்க வைத்து வந்துள்ளது பாமக. அதே நேரத்தில் சொந்த சாதியை வைத்து அரசியல் செய்யும் ராமதாஸ் அரசியல் கட்சி தொடங்கி தனது குடும்பத்தை வளம் மிக்கதாக மாற்றிக் கொண்டாரே தவிர  தான் சார்ந்த சமுதாயத்திற்கும், தன் சமுதாய மக்களுக்கும் எந்த நன்மையும் அவர் செய்யவில்லை என்ற விமர்சனம் அவர் மீது இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர்களே பாமகவை புறக்கணித்து வரும் நிலையும் இருந்து வருகிறது.

கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக மற்றும் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த பாமக திடீரென கடந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பாமகவுக்கு சொல்வாக்கு மிகுந்த பகுதிகளில் தேர்தல் நடந்ததால் பாமக இந்த முடிவு எடுத்தது. தனித்து களமிறங்கியது பாமகவால் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. வன்னிய மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளிலேயே தங்கள் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பது அக்காட்சியை தலைமைக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. அப்படி என்றால் வன்னியர் மக்களே பாமகவை முழுவதுமாக இன்னும் அங்கிகரிக்க வில்லை என்பது இதன் மூலம் நிரூபணமாகி இருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகள் பாமகவை விமர்சித்துவருகின்றன.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பாமக போட்டியிட்ட பகுதிகளில் ஒட்டுமொத்த வன்னிய மக்களும் பாமகவுக்கு வாக்களித்திருந்தால் அக்காட்சி அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்நிலையில் எதிர்வரும் நகராட்சி மன்ற தேர்தலிலாவது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஈடுபட்டு வருகிறார். அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 24 இடங்களை பெற்றாலும், அதில் போதிய அளவிற்கு அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. எனவே ராமதாஸ் கலந்துகொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதற்கான அதிருப்தியை அவர் வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக பாமக நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளுக்கு விலை போகிறவர்களாக சோரம்போகிறவர்களாக உள்ளனர். அப்படிப்பட்டவர்கள் தயவுசெய்து பொறுப்பில் இருந்து விலகிவிடுங்கள். பிற கட்சினர் கொடுக்கும் பணத்திற்காக கட்சிக்கு துரோகம் செய்கிறவர்களாக நிர்வாகிகள் இருக்கிறீர்கள்.

 சிலர் கட்சியை விட்டோ காசுக்காக பிற கட்சிகளுக்கு ஓடுகிறார்கள். நாய் பிழைக்குமா இந்த பிழைப்பு, நீங்கள் எல்லாம் மானமுள்ள வன்னியன்களா.? கட்சி தொடங்கப்பட்டு 32 ஆண்டுகளாகியும் பாமகவால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இது யாருடைய தவறு? நம்முடைய தவறா? மக்களுடைய தவறா? அன்புமணி ராமதாசைப்போல திறமையானவர் ஒருவரும் இல்லை. ஆனால் அவரையே ஏற்றுக்கொள்ள தமிழக மக்கள் மறுத்து வருகின்றனர். வீடு வீடாக போய் பாமகவுக்கு ஓட்டு கேளுங்கள்,  இனி காட்சியில் லோக்கல் அண்டர்ஸ்டாண்டிங் இருந்தால் அவர்களுடைய பதவி அடுத்த நிமிடமே பறிக்கப்படும். வன்னிய இளைஞர்கள் வேறு கட்சிகளுக்கு ஓடுகிறார்கள், மானம் உள்ளவன், மானமுள்ள வன்னியன் இந்த கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு செல்ல மாட்டான். வேறு கட்சிக்கு போனால்  அவன் யாராக இருந்தாலும் அவனுக்கு கிடைக்கும் மரியாதை நாய்க்கு கிடைக்கிற மரியாதை விட பன்றிக்கு கிடைக்கிற மரியாதையைவிட குறைவாக தான் இருக்கும்.

மரியாதை உள்ள கட்சி மானமுள்ள கட்சி பாமக தான் என உணர வேண்டும். ஒருத்தன் ஒரு கட்சிக்கு போனால் போகட்டும் போடாதான். ஐயோ நீ போகாத என்று சொல்லாதே.. " ஓடுகிற நாய் ஓடட்டும்"  " எலும்புத் துண்டுக்காக ஓடுறவனைப் பற்றியெல்லாம் கவலை படாதீர்கள்" என தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறார்.  அவரது பேச்சு பலரும் முகம் சுளிக்கும் வகையில் இருந்து வருகிறது. சொந்த சாதி மக்களையே இப்படி இழிவாக ராமதாஸ் பேசி வருவது சரியல்ல, அதனால்தான் வன்னிய மக்களே அவரை புறக்கணிக்கிறார்கள் என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. 

இந்நிலையில் ராமதாஸ் மற்றும் பாமக குறித்து காடு வெட்டி குருவின் மருமகன் மனோஜ் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- பாமக வன்னிய மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டது. 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட  பாமகவால் ஏன்  2019, 2021ல் தனித்து நிற்க முடியவில்லை. ஏன் தனித்து நிற்க அவர்களுக்கு திராணி இல்லை. 2016 தேர்தலில் 5.5 முதல் 6 சதவீதம் வரை வாக்குகள் பெற முடிந்தது. 2019 இல் 4.5 சதவீதமும், 2021ல் 3.8 சதவீதமும் மட்டுமே பாமகவால் பெற முடிந்தது. ஒட்டுமொத்தமாக பாமகவின் வாக்கு வங்கி சரிந்து விட்டது. அன்றைக்கு தனித்துப் போட்டியிட்டதால் ஓரளவிற்கு அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. அதற்கு காரணம் காடுவெட்டி குரு அவர்கள் தான். நீங்கள் மீண்டும் கூட்டணி வைத்தால் வன்னியர் சங்கத்தை பிரித்து தனியாக தேர்தலை சந்திப்பேன் என்று அவர் பாமகவை எச்சரித்ததால்தான் பாமக தனித்துப் போட்டியிட்டது. மொத்தத்தில் பாமகவுக்கு விழுகின்ற வாக்குகள் அனைத்தும் குருவுக்கான வாக்குகள்.

மொத்தத்தில் அன்புமணி இராமதாசு இந்த சமுதாயத்திற்காக எதுவும் செய்யவில்லை, ஆனால் இந்த கட்சிக்காக மாவட்ட செயலாளர்கள் முதல் கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை தொடர்ந்து ராமதாஸ் அவர்கள் மேடையிலேயே அவமானப்படுத்தும் வகையில் இழிவாக பேசி வருகிறார். வன்னியர் சங்கத்தில் இருந்து உழைத்தவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் தொடர்ந்து அவமானப்படுத்தப் படுகிறார்கள். தென்னாற்காடு மாவட்டத்தில் வன்னியர் சங்கத்திற்காக கடுமையாக பாடுபட்டவர் மூத்தவர் சண்முகம் அவர்கள், அவரது மகன் முத்துகிருஷ்ணன்தான் கடலூர் மாவட்டத்தின் பாமக மாவட்ட செயலாளராக உள்ளார். ஆனால் அவரை மேடையில் அமர்ந்து கொண்டு " டேய் மாவட்டம்"  என ராமதாஸ் கூப்பிடுகிறார்.  இது பலருக்கும் அவமானமாக இருக்கிறது. எந்த கட்சியும் இப்படி தொண்டர்களை கேவலமாக நடத்துவதில்லை. பாமகவில் இருப்பவர்கள் எல்லாம் எங்களது சொந்தக்காரர்கள் தான், உறவினர்கள்தான். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பலரும் வெளியில் வந்து புலம்புகிறார்கள்.

முத்துகிருஷ்ணன் நன்கு படித்த வழக்கறிஞர். அவரது தந்தை சண்முகம் வன்னியர் சங்கத்திற்கு பல தியாகங்களை செய்தவர், அதற்கு மரியாதை கொடுத்திருக்க வேண்டும். அவர் இப்போது மாவட்ட கவுன்சிலராகவும் இருக்கிறார், அந்த பதவிக்காவது அவர் மரியாதை கொடுத்திருக்க வேண்டும். இப்படி எவரையுமே மரியாதை இல்லாமல் நடத்துவது ராமதாஸின் வாடிக்கையாகிவிட்டது. நீங்க மூத்தவர் என்றால் அடேய்.. உடேய்.. என்று கூப்பிட்டால் வீட்டுக்குள் இருக்கும்போது தனிப்பட்ட முறையில் இருக்கும் போது கூப்பிட்டு கொள்ளலாம். ஆனால் அவர் பலரையும் மேடையில் வைத்து ஒருமையில் பேசி வருகிறார். பலரையும் இப்படி பேசும் இவர் அன்புமணி ராமதாசை  மேடையில் பேசுவாரா அடேய் அன்புமணி இங்கே வாடா.. என்று கூப்பிடுவாரா.? இவ்வளவு பெரிய தலைவர் ஒரு பொது இடத்தில் தொண்டர்களை இவ்வளவு அநாகரீகமாக பேசுவது சரிதானா? நாகரீகமாக அவர்களே பேசலாமே? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!