ஜெய்பீம் கலைஞர்கள்,களப்போராளிகளுக்கு பாராட்டு விழா.. பாமகவை பயங்கரமா வெறுப்பேற்றும் கம்யூனிஸ்டுகள்..

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2022, 2:56 PM IST
Highlights

இதே நேரத்தில் ஜெய்பீமுக்கு எதிர்ப்பு கிளம்பிய போது விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்  அப்படத்திற்கு ஆதரவாக இருந்தன. மேலும் நடிகர் சூர்யா மற்றும் அவர் தந்தை சிவகுமார் த.செ ஞானவேல் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர்.
 

ஜெய் பீம் திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (04.1.2022) பாராட்டு விழா நடைபெறு உள்ளது. அதற்கான அறிவிப்பை அக்கட்சி வெளியிட்டுள்ளது.  

கடலூர் மாவட்டம், கம்மாபுரத்தில் காவல் சித்திரவதையால் கொல்லப்பட்ட ராசாக்கண்ணுவின் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட “ஜெய்பீம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்து சாதனை படைத்ததுடன், மறைக்கப்பட்ட இருளர் - பழங்குடியினர் வாழ்க்கை நிலைமைகளை வெளியுலகிற்கு வெளிக்கொணர்ந்துள்ளது.படிநிலையில் வாழும் பட்டியலின மக்களின் சமூக வாழ்நிலை மாற்றத்தை நோக்கி இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திரு. த.செ. ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர், கலை இயக்குநர் கதிர், இசையமைப்பாளர் சேன் ரோல்டன், திரைக்கலைஞர்கள் மணிகண்டன், தமிழரசன், பவா செல்லத்துரை, இரா. காளீஸ்வரன் உள்ளிட்டவர்களை  பெருமைபடுத்தும் விதமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 4.1.2022 அன்று மாலை 5.00 மணிக்கு சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இத்திரைப்படத்தின் கலைஞர்கள், களப்போராளிகளை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், பி. சம்பத், உ. வாசுகி, டி. ஆறுமுகம் உள்ளிட்ட தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர். இவ்விழாவில் மறைந்த ராஜாக்கண்ணு மனைவி திருமதி பார்வதி, நீண்ட, நெடிய சட்டப்போராட்டங்களை நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் முதனை ஆர். கோவிந்தன், ஆர். ராஜ்மோகன், வழக்கறிஞர் அ. சந்திரசேகரன் உள்ளிட்ட களப்போராளிகளும் கலந்து கொள்கின்றனர். இதற்கான அழைப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. 

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான  இத்திரைப்படம் ஜெய்பீம், பழங்குடியின மக்கள் காவல் துறையின் அடக்குமுறையால் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. பழங்குடியினர் சமூகத்தின் அவலத்தைப்  பேசிய இப்படத்தின் மூலம்  தமிழக அரசின் பார்வை அம்மக்களின் மீது  திரும்பியுள்ளது. பல ஆண்டுகளாக சாதி சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்காக அம்மக்கள் போராடி வரும் நிலையில்  அவர்களுக்கு உடனே சான்றுகளை வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, இருப்பிட வசதி உள்ளிட்டவைகள்  குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது. 

மொத்தத்தில் பழங்குடியின மக்களுக்கு விடியலை ஏற்படுத்திய திரைப்படமாக ஜெய்பீம் அமைந்துள்ளது. அதே நேரத்தில் இத்திரைப்படத்தில் குறிப்பிட்டு தங்கள் சமூகம் இழிவுபடுத்த பட்டிருப்பதாகவும், தங்கள் சமூகத்தின் அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு திட்டமிட்டே பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் கூறி பாமக, வன்னியர் சங்கம் இப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததுடன், படத்தின் இயக்குனர்  மற்றும் நடிகர் தயாரிப்பாளருமான சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டுமென போராடி வந்தனர்.  நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாமகவினர் நடத்திய போராட்டம் பெரும் விவாதப் பொருளாக மாறியது. பாமகவினரின் எல்லைமீறிய பேச்சுக்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக திரண்டனர்.  இந்த விவகாரத்தில் பாமக கடும் விமர்சனத்திற்கு ஆளானது. ஒரு கட்டத்தில்  படத்தின் இயக்குனர் தா.செ.ஞானவேல் அந்த குறிப்பிட்ட காட்சிக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் நடிகர் சூர்யாதான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுநாள்வரை சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை. இதனால் இந்த விவகாரம் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது.

இதே நேரத்தில் ஜெய்பீமுக்கு எதிர்ப்பு கிளம்பிய போது விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்  அப்படத்திற்கு ஆதரவாக இருந்தன. மேலும் நடிகர் சூர்யா மற்றும் அவர் தந்தை சிவகுமார் த.செ ஞானவேல் ஆகியோர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். அதற்கான புகைப்படங்களும் வெளியானது. இந்த திரைப்படத்தில் ராஜாக்கண்ணுவின் மரணத்திற்கு நீதி கேட்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய போராட்டம், அதனால் பார்வதிக்கு  கிடைத்த நீதியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ஜெய்பீம் திரைப்படத்தின் கலைஞர்கள், கள போராளிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருபுறம் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும், இந்த படத்திறகு எந்தவிதமான விருதுகளும் அறிவிக்கக் கூடாது என பாமகவினர் பகிர்ந்த முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஜெய் பீம் திரைப்படத்திற்கும், அதன் கலைஞர்களுக்கு பாராட்டு விழா அறிவித்திருப்பது  குறிப்பிடத்தக்கது. 
 

click me!