கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் கனிமொழி எம்.பி., கலந்து கொள்ளாதது திமுகவினுள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது
கலைஞர் நூற்றாண்டு விழாவை திமுக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. மருத்துவமனைகள், நூலகங்கள் என மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் சரியாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையின் மற்றொரு அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
மதுரை புதுநத்தம் சாலையில் அதிநவீன அம்சங்களுடன் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் திமுக எம்.பி.யும், கலைஞரின் மகளுமான கனிமொழி கலந்து கொள்ளவில்லை. அமலாக்கத்துறை ரெய்டுகளையும் தாண்டி இந்த விவகாரம் திமுகவினுள் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞரின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி, கொள்கைகளை தெளிவாக எடுத்துக்கூறும் திறமை, கட்சியனரை, பொது மக்களை கனிவுடன் அணுகும் பாங்கு போன்றவை கனிமொழிக்கு நல்ல இமேஜை கொடுத்துள்ளது. ஆனால், அண்மைக்காலமாகவே கனிமொழி ஓரங்கட்டப்படுவதாக அரசல்புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கலைஞருக்கு வாரிசுகள் பலர் இருந்தாலும், அரசியல் வாரிசுகளாக அறியப்படுபவர்கள் ஸ்டாலினும், கனிமொழியும்தான். அழகிரி ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஸ்டாலின் முதல்வரான நிலையில், கனிமொழி டெல்லி அரசியலில் உள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சிகளின் பலம் ஒரு பார்வை!
அழகிரியோடு சேர்ந்து தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியும் இருட்டடிப்பு செய்யப்பட்ட நிலையில், அதற்கு கனிமொழி வெளிச்சம் பாய்ச்சுவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில், தூத்துக்குடிக்குளேயே அவர் முடக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி வர வேண்டும் என்பதால், கனிமொழியை தூத்துக்குடிக்குள் முடக்குவதில் ஸ்டாலின் குடும்பத்தினர் தெளிவாக இருப்பதால், தொடர்ந்து அவர் ஓரங்கட்டப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால், கழக மேடைகளை தலைவரோடு அமர்ந்து அலங்கரிக்கும் திமுகவின் துணை பொதுச்செயலாளராக கனிமொழியை தேர்வு செய்து இந்த சலசலப்புகளுக்கு அக்கட்சி மேலிடம் முற்றுப்புள்ளி வைத்தது. இருப்பினும், கடந்த சில நாட்களாகவே கனிமொழி மீண்டும் ஓரங்கட்டப்படுவதாக கட்சிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளன.
அந்த வகையில், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிலும் கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளவில்லை. அன்றைய தினம் சென்னையிலேயே அவர் இருந்து விட்டார். சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் காமராஜர் புகைப்படத்துக்கு மரியாதை செய்து அவரை நினைவுகூர்ந்ததோடு சரி; கலைஞர் நூலகம் குறித்து எந்த வாழ்த்து செய்தியையோ அல்லது எந்தவொரு கருத்தையுமோ அவர் தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் நூலக திறப்பு விழாவுக்கு முந்தைய நாள் கனிமொழி தூத்துக்குடியில்தான் இருந்தார். அங்கிருந்து அருகே உள்ள மதுரை வராமல் நேராக சென்னை சென்ற கனிமொழி, நூலக திறப்பு விழாக்கு அடுத்த இரு நாட்களும் சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் அளப்பறிய தொண்டாற்றிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது நினைவைப் போற்றுவோம்.
அவர் வழியில் கல்வி என்னும் சமூக மாற்றத்திற்கான அறிவாயுதத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் வழங்கிட உறுதிகொள்வோம். pic.twitter.com/CXPhXnNJPY
இதுகுறித்து விசாரிக்கையில், கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவுக்கான அழைப்பை கனிமொழிக்கு முறையாக வழங்கவில்லை என்கிறார்கள். நூலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும்கூட யாரோ ஒருவருக்கு அனுப்புவது போல கலைஞரின் மகளான கனிமொழிக்கும் அனுப்பியதாக கூறப்படுகிறது. தமிழக அரசு சார்பிலோ, முதல்வரும், அவரது சகோதரருமான ஸ்டாலின் சார்பிலோ எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்கிறார்கள். இதனால், அப்செட்டில் இருந்த கனிமொழி, மதுரை கலைஞர் நூலக திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை என கூறுகிறார்கள். இந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல அடிக்கடி இதுபோன்றுதான் நடக்கிறது எனவும் கனிமொழி ஆதரவாளர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்த போது, இது கண்டிப்பாக ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். நூலக அழைப்பிதழில் மதுரை எம்.பி.யின் பெயர் விடுபட்டது. இடதுசாரி சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் நடத்தப்பட்ட விதம் என சில சொதப்பல்கள் நடந்துள்ளன எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அருணன் விவகாரத்தில் அவரது பதிவையடுத்து, உடனடியாக அரசு எதிர்வினையாற்றியதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கனிமொழி பங்கேற்றதை சுட்டிக்காட்டும் அவர்கள், கனிமொழியை யாரும் ஓரங்கட்டவில்லை; அவருக்கான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என முடித்துக் கொண்டனர்.