ஆளுநர் பதவி ஏன் தேவை..? ஆளுநர் பதவி குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வது என்ன?

By Asianet TamilFirst Published Apr 21, 2022, 9:46 PM IST
Highlights

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 152 முதல் 162 வரை ஆளுநர் பற்றிய விஷயங்களைத்தான் குறிப்பிடுகிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் 153, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநர் தேவை என்று சொல்கிறது. 

ஆளுநர் பதவி தேவையில்லை என்று சில அரசியல் கட்சிகள் கூறி வரும் நிலையில், அந்தப் பதவி குறித்து அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து பார்க்கலாம். 

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே மோதல் முற்றியிருக்கும் சூழலில், ஆளுநர் பதவி தேவையா என்ற விவாதங்களும் தமிழகத்தில் கிளம்பியிருக்கிறது. தமிழகத்தில் ஆளுநர் பதவி குறித்த விவாதம் இப்போது ஏற்பட்டதல்ல.  ‘ஆட்டுக்கு தாடி எப்படி தேவையில்லையோ, அதுபோலவே நாட்டுக்கு ஆளுநர் பதவி தேவையில்லை’ என்று முழங்கினர் திமுகவை தொடங்கிய அண்ணாதுரை. அவர் வழி வந்த திராவிட கட்சித் தலைவர்களும் இந்தக் கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு நீட் தேர்வு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை அவர் நிலுவையில் வைத்திருக்கும் நிலையில், ஆளுநர் பதவி தேவையில்லை என்ற கோஷத்தை திமுக தலைவர்களும் அக்கூட்டணியில் உள்ள விசிக, தவாக உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

அரசியல் சட்டம் சொல்வது என்ன?

இந்நிலையில் ஆளுநர் பதவி எப்படி வந்தது, அந்தப் பதவி ஏன் தேவை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆளுநர் பதவி என்பது சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்ட பதவி அல்ல. அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்துவரும் பதவி. ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் ‘வைஷ்ராய்’ என்ற பதவி தலைமை பதவியாகவும், சமஸ்தானங்களில் நிர்வாகத் தலைவராக ஆளுநர் பதவியும் இருந்தது. ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டில் பின்பற்றிய சட்டத்தையொட்டியே இந்திய அரசியலமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டது.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் 152 முதல் 162 வரை ஆளுநர் பற்றிய விஷயங்களைத்தான் குறிப்பிடுகிறது. இந்திய அரசிலமைப்புச் சட்டம் 153, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஆளுநர் தேவை என்று சொல்கிறது. 

 நிர்வாக தலைவர் ஆளுநர்

இதேபோல இந்திய அரசியலமைப்புச் சட்டம் 154-ன் படி நிர்வாக அதிகாரம் முழுவதும் ஆளுநரிடம்தான் இருக்கும். ஆளுநர் நேரடியாகவோ அல்லது அதிகாரிகள் மூலம் மறைமுகமாகவோ நிர்வாக கடமையாற்றலாம். இதேபோல பிரிவு 159 சட்டப்படி பதவி பிரமாணத்தை ஆளுநர்தான் மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தின் நிர்வாக தலைவராக ஆளுநர் இருந்தாலும், உண்மையான அதிகாரம் மாநில அமைச்சரவையிடம்தான் இருக்கும். அந்த அமைச்சரவைக்கு தலைமை தாங்கும் முதல்வரை மாநில ஆளுநரே நியமிக்கிறார். முதல்வரின் பரிந்துரைப்படி அமைச்சர்களையும் துறைகளையும் ஒதுக்கீடு செய்கிறார் ஆளுநர். மாநிலத்தின் நிர்வாகத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதும் ஆளுநரின் கடமையில் ஒன்று.  

மசோதாவுக்கு ஒப்புதல்

ஆளுநர் பதவி என்பதே அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஏற்படுத்தப்பட்ட பதவியாகும். எனவே, ஆளுநர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவியாகும். இந்தப் பதவி தேவையில்லை என்று சில அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புவது குறித்து மூத்த பத்திரிகையாளர் சு. குமரேசனிடம் ‘ஏசியாநெட் தமிழ்’ கேட்டது. இதற்கு பதிலளித்த குமரேசன், “மாநிலங்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே, மத்திய அரசின் சார்பில் மாநிலத்தின் ஒரு பிரதிநிதியாக ஆளுநர் இருக்கிறார். ஆளுநர் இல்லாவிட்டால், மாநில அரசின் செயல்பாடு, போக்கு குறித்து மத்திய அரசு சார்பில் உள்ள ரா, ஐ.பி. போன்ற உளவு அமைப்புகள் மூலம் அறியலாம். ஆனால், ஆளுநர் மாநில அரசை கண்காணிப்பது மட்டுமின்றி, மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கிறார். ஒரு மாநில அரசு மசோதாவை நிறைவேற்றும்போது, அந்த மசோதா தேவையா, இல்லையா, சந்தேகம் இருந்தால் கேள்வி எழுப்புவது போன்றவற்றை கேட்டு தெளிவு பெற்று ஒப்புதல் அளிக்கிறார். ஒரு வேளை ஆளுநர் இல்லாவிட்டால், மாநில அரசு இஷ்டத்துக்கு சட்டங்களை இயற்றும். அங்கு ஆளுநர் தேவைப்படுகிறார். மாநில அமைச்சரவை கலைக்கப்பட்டிருக்கும் சூழலில் ஆளுநர்தான் மாநிலத்தையே நிர்வாகம் செய்கிறார். எனவே, ஆளுநர் பதவி தேவைதான்?” என்றார் குமரேசன்.

ஆளுநர் பதவி குறித்து  அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பினாலும், அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டது ஆளுநர் பதவி என்பதால், அந்தப் பதவி கேள்விக்கு அப்பாற்பட்டதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
 

click me!