
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "அப்பல்லோவில் அம்மா இட்லி சாப்டாங்க என்று நாங்க சொன்னதெல்லாம் பொய்... அய்யா எங்கள மன்னிச்சிடுங்க” என்று கை தூக்கி கும்பிட்டு, பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த அதிமுக., தொண்டர்களைப் பார்த்துக் கூறினாலும் கூறினார், அது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அது மட்டுமல்ல, சசிகலா தரப்பை நெருக்குவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது, தினகரன் ஆதரவாளர்களை சற்றே கலவரத்தில் ஆழ்த்திவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
அந்தப் பொதுக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் எழுப்பிய மேலும் சில கேள்விகள், தினகரன் தரப்பை நெளியவைத்துள்ளது. அதில் ஒன்றாக, தாங்கள் சொல்லியும் கூட, தனது சின்னம்மாவின் படத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டு தேர்தல் பிரசாரம் செய்வதை தினகரன் தவிர்த்தார். மக்கள் சின்னம்மா படத்தைப் போட்டால் ஓட்டு போட மாட்டார்கள், அது ஏன் என்று அவருக்கே தெரியும். அதனால்தான் அதை அவர் பயன்படுத்தவில்லை என்று கூறினார் திண்டுக்கல் சீனிவாசன்.
இந்தக் கேள்விக்கு இன்று பதிலளித்துள்ளார் டிடிவி தினகரன். சென்னையில் அடையாறு இல்லத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது, “குப்பை பொறுக்குபவர்களை வைத்து சசிகலாவின் படத்தை கிழித்தவர்கள் திமுக.,வினர். திமுக.,வினர் செய்த சதிச் செயலை முறியடிக்கத்தான், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா படத்தை பயன்படுத்தவில்லை.” என்று விளக்கம் அளித்துள்ளார்.