
அ.தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளர்களாக இருந்த பல சினிமா நட்சத்திரங்கள் ஜெ., மறைவுக்குப் பின் கரை ஒதுங்கி காணாமல் போய்க் கிடக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் ஆனந்த்ராஜோ மெதுவாக ரஜினிக்கு கொடிபிடிக்க துவங்கியிருக்கிறார்.
சமீபத்தில் ரஜினி, கமல் அரசியல் பற்றிப் பேசியிருக்கும் அவர்...”சமீபத்தில் ரஜினியை சந்தித்தேன். பேச வேண்டிய அவசியம் இருந்ததால் நிறைய பேசினோம்.
ரஜினியிடம் பயனடைந்த, அரசியலில் பிழைக்கும் சினிமாக்காரர்கள் சிலர் இன்று அவரை எதிர்க்கின்றனர். ’ரஜினி வந்தால் நாம காணாமல் போய்விடுவோம்!’ என்கிற எண்ணம்தான் இந்த பயத்துக்கு காரணம். ஆனால் கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டுவிட்டு ரஜினி தூக்கி எறியப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை, அது தமிழர் பண்பாடுமில்லை.
பெரும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பெரிய கட்சிகள் கூட பாரபட்ச கண்கொண்டுதான் பார்க்கின்றன. ரஜினியிடம் எதிர்ப்பு காட்டுபவர்கள், கமலுக்கு மட்டும் மெளனம் காட்டுவது ஏன்? இதுதான் மேட்டரே.
சிம்பிளாய் ஒரு கேள்வி கேட்கிறேன்...அன்று ரஜினி அரசியலுக்கு வராத போது அவரது வாய்ஸ் மட்டும் தேவைப்பட்டது சிலருக்கு. அதை வைத்து ஆதாயம் தேடிக் கொண்டார்கள். ஆனால் இன்று அவர் அரசியலுக்கு வர முடிவெடுத்ததும் எதிர்த்து தள்ளுகிறார்கள்.
ஆனால் கமலிடம் எப்போதும் யாரும் வாய்ஸ் கேட்கவில்லை, ஆனால் அவர் அரசியலுக்கு வந்ததும் வாழ்த்துகிறார்கள். என்னாங்க தடுமாற்றம் இது!?
ரஜினி மற்றும் கமலின் அரசியலுக்கு பின்னால் பி.ஜே.பி. உள்ளது என்று பொதுவான விமர்சனம் இருக்கிறது. உண்மையில் அவர்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு எனக்கு விடை தெரியும். ஆனால் அதை இப்போது உடைக்க மாட்டேன்.” என்று புதிர் வைத்திருக்கிறார்.
அன்று ரஜினியின் வாய்ஸால் பலனடைந்துவிட்டு இன்று ரஜினியை எதிர்க்கிறார்கள்! என்று ஆனந்த்ராஜ் எகிறுவது தி.மு.க.விடம் தான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
நிஜம்தான்!