ஐடி விங் பதவியை ராஜினாமா செய்தது ஏன்? தலைமை கொடுத்த அழுத்தமா? பிடிஆர் பழனிவேல் பரபரப்பு விளக்கம்.!

By vinoth kumarFirst Published Jan 21, 2022, 10:42 AM IST
Highlights

தமிழக நிதித்துறை அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் செயலாளராகவும் கட்சியில் பதவி வகித்து வந்தார். கட்சி பதவியில் இருந்து அவர் அண்மையில் ராஜினாமா செய்தததையடுத்து, அந்த பதவிக்கு புதிதாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி விலகளுக்கு தலைமை கொடுத்த அழுத்தமே காரணம் என்ற செய்திகள் வெளியாகின. 

அமைச்சர், சட்டமன்ற உறுப்பினருடன் கட்சியின் தகவல்தொழில் நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்ததால் கட்சியில் பொறுப்பில் இருந்து விலகியதாக  நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

தமிழக நிதித்துறை அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக ஐடி விங் செயலாளராகவும் கட்சியில் பதவி வகித்து வந்தார். கட்சி பதவியில் இருந்து அவர் அண்மையில் ராஜினாமா செய்தததையடுத்து, அந்த பதவிக்கு புதிதாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரது பதவி விலகளுக்கு தலைமை கொடுத்த அழுத்தமே காரணம் என்ற செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், திமுக ஐடி விங் உடன்பிறப்புகளுக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கடந்த இரண்டு நாட்களாக என்னை தொடர்பு கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்து நான் விலகியது குறித்து வருத்தத்தையும், இதுவரை நான் ஆற்றிய பணிக்கு நன்றியையும், எனது எதிர்கால பணிகளுக்கு வாழ்த்துக்களையும் பலரும் வெளிப்படுத்தி வருகிறீர்கள். நான் அக்கறை செலுத்திய பலரும் இன்றும் என் மீது அன்பு கொண்டுள்ளனர் என்பதை பார்க்கும்போது, நான் உண்மையில் பெரும் பாக்கியம் பெற்றிருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.

எனது இந்த பொறுப்பு விலகல் குறித்து யாரும் வருந்த வேண்டாம். எப்படி பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயான உறவானது எக்காலமும் நீடித்திருக்கிறதோ, அதே போல நமது பிணைப்பும் நிரந்தரமானது. 2017ம் ஆண்டு ஜூன் மாதம், ஆரம்பத் திட்டம் கூட இல்லாத நிலையிலிருந்து இன்று தனித்துவம் மிக்க வலுவான ஒரு அணியை கட்டமைத்து வழிநடத்திய ஒருவராய் நான் என்றுமே திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஓர் அங்கமாகவே இருப்பேன், இந்த அணியும் என் வாழ்வின் ஓர் அங்கமாக இருக்கும். ஆண்டுகளாக, பல்வேறு நாடுகளில், பல துறைகளில் நான் நல்ல மாற்றத்துக்கான காரணமாகவே இருந்துள்ளேன். மாற்றம் தவிர்க்க முடியாத ஒன்று. மாற்றத்தை ஊக்குவிக்கும் நபர்களே எதிர்காலத்தை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை என் வாழ்வின் ஆரம்பகாலங்களில் இருந்தே உணர்ந்திருக்கிறேன்.

அரசியல் களத்திலும் தகவல் தொடர்பையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, என் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பணிகளிலும், சட்டமன்ற உறுப்பினராக நான் முன்னெடுத்த திட்டங்களிலும் என்னால் இயன்ற சிறிய மாற்றங்களை உண்டாக்க முயற்சித்துள்ளேன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது, அற்பணிப்புடன் பணியாற்றிய, அறிவார்ந்த, திறன் வாய்ந்த இளம் தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அணியின் தனித்துவம் வாய்ந்த கொள்கைகள், சுயமரியாதை பண்பு மற்றும் திராவிட கொள்கையின் மீது கொண்ட பற்றே ஆகும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக, வெளி நாடுகளில் பணிபுரிந்து பல சாதனைகளை படைத்த போதிலும், நம் அணியின் முன்னேற்றம் என்ற சாதனைதான் எனக்கு மிகப்பெரிய மனநிறைவையும், பெருமையையும் அளித்துள்ளது. அதற்காகவும், தங்களின் தொடர் உழைப்புக்காகவும், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.

தன்னிடம் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதே ஒரு சிறந்த நிர்வாகியின் அடையாளம். கடந்த சில மாதங்களாக, ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் நான் ஆற்ற வேண்டிய கடமைகளுடன், நான் மேற்கொள்ள வேண்டிய தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்தது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நம் மாநிலத்தின் நிதிநிலை வெகு வேகமாக சீரழிந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். உண்மையில், பொது நிர்வாகமும் அதற்கு இணையாக பெரும் சீர்கேடுகளை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில், நமது முதல்வரின் சிறந்த வழிகாட்டுதலின் பலனாக, எங்கள் முழு கவனத்தையும், திறன்களையும் பயன்படுத்தி இந்த நிலைமையை பெருமளவில் சரிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது போன்ற சூழலில், நிர்வாக ரீதியாக நான் ஆற்ற வேண்டிய கடமையின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. முழு அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலில், பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது இயல்பு அல்ல என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அதன் பொருட்டு, நம் கழகத் தலைவரிடம் என் பொறுப்பு விலகல் கடிதத்தை வழங்கினேன். அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொண்டார்.

ஒருவருடைய வாழ்வின் உண்மையான மதிப்பு அவர் மறைந்த பிறகே உணரப்படுகிறது என்ற உண்மையை 2006ல் என் தந்தையின் இறுதிச் சடங்கில் நான் அறிந்து கொண்டேன். அது போல, இந்த அணியை மேம்படுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களை, டி.ஆர்.பி ராஜாவின் புதிய தலைமையின் கீழ் எவ்வளவு சிறப்பாக அணி செயல்படுகிறது என்பதை வைத்து மதிப்பிட்டுவிடலாம். அவருடன் இணைந்து பணியாற்றி நம் அணியை மென்மேலும் வளர்ச்சியடைய செய்யுமாறு உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

click me!