தெலுங்கானா கிரானைட் முதல் பங்குசந்தை முதலீடு வரை... கே.பி அன்பழகனை வசமாக சிக்க வைத்த பின்னணி இதுவா..?

By Raghupati RFirst Published Jan 21, 2022, 9:57 AM IST
Highlights

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான 58 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ.2.87 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தின்போது லஞ்சம் மற்றும் பல்வேறு முறைகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கோ.சி .வீரமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனைகள் நடத்தப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பதவி வகித்த கேபி அன்பழகனுக்கு தொடர்புடைய 55 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். 

அதிகாலை அவரது வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த அதிகாரிகள் அதே நேரத்தில், அன்பழகனுக்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக சோதனைகள் மேற்கொண்டனர். தர்மபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள அன்பழகனின் மாமனார் அப்புனு கவுண்டர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி, அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமியின் வீடு, நேரு நகரிலுள்ள அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீடு, அன்னசாகரத்திலுள்ள அதிமுக நகர செயலர் ரவி வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடந்தது.

அதேபோல, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் வெற்றிவேல், ஆடிட்டர் பழனிசாமி வீடு, கான்ட்ராக்டர்கள் இக்பால், பாஸ்கர்  ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். மேலும், பென்னாகரம் அடுத்த தாளப்பத்திலுள்ள, தர்மபுரி ஆவின் சேர்மன் டி.ஆர்.அன்பழகன் வீடு, அரூரில் பி.டி.ஆர்.வி தனியார் பள்ளியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம், இரும்பாலை, ராசி நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவர் கனிம வளத்துறையில் உதவி இயக்குனராக பணிபுரிகிறார். 2013 முதல், 2019 வரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணிபுரிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு நெருக்கமானார். தற்போது கரூரில் பணிபுரியும் நிலையில், அவரது சேலம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில்  2 கோடியே 87 லட்சத்து, 98 ஆயிரத்து 650 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் 6.637 கிலோ கிராம், சுமார் 13.85 கிலோ கிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத 2 கோடியே 65 லட்சத்து 31 ஆயிரத்து, 650 ரூபாய், வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என லஞ்ச ஒழிப்பு போலீசார் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 - 2021 காலக்கட்டத்தில் அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது.இந்த சொத்துக்களில், 50 சதவீத பங்கு ஸ்ரீ பாக்யலட்சுமி தியேட்டர், 50 சதவீத பங்கு எஸ்.எம் ப்ளூ மெட்டல், ஏ.எம்.பி.எஸ் என்டர்பிரைசஸ்' உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ளன. மகன்கள் பெயரில் கிளினிக், மனைவி குடும்ப உறுப்பினர்கள் பெயரில் சரஸ்வதி பழனியப்பன் கல்வி அறக்கட்டளை உள்ளிட்டவைகளை தொடங்கியுள்ளதும் தெரிகிறது. தேர்தலில் அளித்துள்ள சொத்து விபரங்கள் அடிப்படையில், அன்பழகனிடம், 10 கோடியே, 10 லட்சத்து, 39 ஆயிரத்து, 663 ரூபாய் இருக்க வேண்டும். 

ஆனால், வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே, 32 லட்சத்து, 95 ஆயிரத்து, 755 ரூபாய் சேர்த்துள்ளதும் தெரிந்துள்ளது. காரிமங்கலம் காளப்பனஹள்ளி பகுதியில் 'ஹாட் மிக்ஸ்' ஆலை, கல் குவாரி ஆலைகள் மருமகன் ரவிசங்கர், மைத்துனர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோரது பெயரில் நடத்தி வருவதும், சென்னை, கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில், 'கணபதி கிரானைட்ஸ்' என்ற தொழிற்சாலையை தங்கை மகள் தீபா, மருமகன் சிவகுமார் பெயரில் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. 

அதில், 80 சதவீத பங்குகளை மருமகன் சிவகுமார் வைத்துள்ளார். தெலுங்கானா மாநிலம், கரீம்நகரில், மருமகள் பெயரில் 'வைஷ்ணவி கிரானைட் இண்டஸ்ட்ரீஸ்' வைத்துள்ளார். மேலும் தமிழகம், வெளி மாநிலங்களில், தன் குடும்பத்தார், நண்பர்கள் பெயரில், ஏராளமான சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த தகவல் அதிமுக வட்டாரங்களில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

click me!