நெருங்கும் உள்ளாட்சித் தேர்தல்.. திமுகவுக்கு செக் வைக்கும் அதிமுக.. டெல்லியில் நடக்கும் ஏற்பாடு.!

By Asianet TamilFirst Published Jan 21, 2022, 8:31 AM IST
Highlights

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளுங்கட்சி அதற்கான எல்லா பணிகளையும் முடித்துவிட்டது. பொங்கல் பரிசு பையால் ஆளுங்கட்சிக்கு நல்லப் பெயர் கிடைக்கும் என்று திமுக எதிர்பார்த்தது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கம் வழங்கப்படாததால், மக்கள் மத்தியில் சற்று அதிருப்தி ஏற்பட்டதை ஆளுந்தரப்பு உணர்ந்திருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், திமுகவுக்கு செக் வைக்கும் வகையில் பிரதமர் மோடி அல்லது உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக  தலைமை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளுங்கட்சி அதற்கான எல்லா பணிகளையும் முடித்துவிட்டது. பொங்கல் பரிசு பையால் ஆளுங்கட்சிக்கு நல்லப் பெயர் கிடைக்கும் என்று திமுக எதிர்பார்த்தது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்போடு ரொக்கம் வழங்கப்படாததால், மக்கள் மத்தியில் சற்று அதிருப்தி ஏற்பட்டதை ஆளுந்தரப்பு உணர்ந்திருக்கிறது. மேலும் பொங்கல் பரிசு பையில் பல்லி கிடந்த விவகாரம், உருகிய வெல்லம், கலப்பட பொருட்கள் என வரிசையாக சர்ச்சைகள் உருவாயின. இந்தச் சர்ச்சைகளை அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து திமுக அரசுக்கு எதிராக ஸ்கோர் செய்யும் முயற்சியில் இறங்கின.

சுமார் 1300 கோடி செலவில் வழங்கப்பட்ட இந்தப் பொருட்களில் ஊழல் என்று தொடர்ந்து அதிமுகவும் பாஜகவும் திமுக அரசுக்கு எதிராக புகார் பட்டியல்கள் வாசித்துக்கொண்டிருக்கின்றன.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரையில் பொங்கல் பரிசு வை விவகாரத்தை நீர்த்துப்போகாமல், தொடர்ந்து பேசவும் அதிமுக முடிவு செய்திருக்கிறது. இன்னொரு பக்கம் புதிதாக திறக்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், தங்களுடைய சாதனை போல திமுக அமைச்சர்கள் பேசுவது அதிமுகவை எரிச்சலடைய வைத்திருக்கிறது. மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற அரசாணையை வெளியிட்டதே முந்தைய திமுக ஆட்சிதான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியிருந்தார். 

கடந்த மே மாதத்துக்கு முன்பு, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, புதிய மருத்துவக் கல்லூரி திறப்பை தங்களுடைய சாதனையாகக் குறிப்பிடுவதை அதிமுக மட்டுமல்ல, பாஜகவும் ரசிக்கவில்லை. புதிய மருத்துவக் கல்லூரிகளின் தங்களின் சாதனை என்று திமுக - அதிமுக என 2 கட்சிகளுமே கூறி வருகின்றன. இந்நிலையில் இதற்கு செக் வைக்கும் வகையிலும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு அதை சாதகமாக்கும் வகையிலும், 11 மருத்துவக் கல்லூரி வழங்கிய மத்திய அரசுக்கு நேரடியாக நன்றி தெரிவிக்க அதிமுக தலைமை முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

பிரதமர் மோடியை நேரடியாக சந்திக்க முடியவில்லை என்றாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தாவது நன்றி தெரிவிக்க அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது மத்திய பாஜக - முந்தைய அதிமுக அரசின் சாதனை என்பதை பொதுமக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க முடியும் என்று அதிமுக நம்புகிறது. இதையொட்டி பிரதமர் மோடி அல்லது உள் துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் சந்திப்பு விரைவில் நடக்கும் என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

click me!