நெல்லையில் நயினார் நாகேந்திரன் அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்தது ஏன்..? பின்னணியில் குஷ்பு?

By Asianet TamilFirst Published Mar 13, 2021, 8:55 AM IST
Highlights

திருநெல்வேலி தொகுதி நடிகை குஷ்புவுக்கு வழங்கப்படக்கூடும் என்ற காரணத்தினாலே தமிழக பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தலைமை இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. ஆனால், அதுவரை காதிருக்காமல், நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை அவசரமாக தாக்கல் செய்தார். ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி, சில பேருடன் வந்து அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘நல்ல நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்ததாக’ பட்டும் படாமல் கூறினார்.
இதுகுறித்து பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட நடிகை குஷ்பு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால், அந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அதிர்ச்சியில் உள்ளார் குஷ்பு. எனவே, வெற்றி வாய்ப்புள்ள நெல்லை தொகுதியை குஷ்பு தனக்கு கேட்டு வருவதாகவும், இதுதொடர்பாக குஷ்பு அழுத்தம் கொடுத்து வருகிறார். இந்த விஷயம் தெரிந்ததுமே, அவசர அவசராமக நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகிறார்கள்.
வேட்புமனு தாக்கலின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பி படிவத்தை வழங்க வேண்டும். அந்தப் படிவமே இல்லாமல் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, அவருடைய வேட்பு மனு சுயேட்சையாகவே கருதப்படும். ஆனால், அவர் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, பி படிவத்தைத் தாக்கல் செய்துவிடுவார் என்று நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால், பாஜக தலைமை வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது பாஜக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!