எனக்கு ஏமாற்றமும் இல்ல... எதிர்பார்ப்பும் இல்ல... தன்னை தானே தேற்றிக்கொள்ளும் குஷ்பு..!

By Asianet TamilFirst Published Mar 12, 2021, 9:55 PM IST
Highlights

எதிர்பார்ப்பு இருக்கும்போதுதானே ஏமாற்றம் இருக்கும். எனவே, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எனக்கு இல்லை என்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடாமல் போனது குறித்து நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சியைச் சேர்ந்த குஷ்பு பாஜக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் தொகுதியின்  பொறுப்பாளராகவும் குஷ்பு நியமிக்கப்பட்டிருந்தார். அவரும் ஆர்வமாக தொகுதியைச் சுற்றி பிரசாரம் செய்து வந்தார். ஆனால், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி ஒதுக்கப்பட்டது. இதனால் நடிகை குஷ்பு ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். “எனக்கு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் பொறுப்பாளராகத்தான் பணி ஒதுக்கப்பட்டது. பாஜக சார்பில் இந்தத் தொகுதியில் என்னுடைய பணியை செய்துவந்தேன். பாஜகவை பலப்படுத்த உழைத்தேன். சேப்பாக்கம் நீங்கள்தான் போட்டியிடுகிறீர்கள்; அதனால் அங்கே பணியாற்றுங்கள் என யாரும் என்னிடம் கூறவில்லை. நானும் தேர்தலில் போட்டியிடுவேன் என்ற  எண்ணத்தில் சேப்பாக்கத்தில் பணியாற்றவில்லை. கட்சிக்காக மட்டுமே உழைத்தேன்.
கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து நான் சந்திக்கும் 5-வது தேர்தல் இது. ஒவ்வொரு தேர்தலிலும் குஷ்பு இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் எனச் சொல்லுவார்கள். பின்னர் குஷ்புக்கு இந்தத் தொகுதியைத் தரவில்லை என்பதால் வருத்தத்தில் உள்ளார் என அவர்களே பேசுவார்கள். நான் எங்குமே தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்ததில்லை. எதிர்பார்ப்பு இருக்கும்போதுதானே ஏமாற்றம் இருக்கும். எனவே, எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எனக்கு இல்லை. நான் கட்சியை நம்பிதான் வந்துள்ளேன். எனக்கு பொறுப்பு கொடுக்கப்படும் தொகுதியை அளிப்பார்கள் என்று நான் வரவில்லை” எனக் குஷ்பு தெரிவித்துள்ளார்.
 

click me!