பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு... சி.டி.ரவி, எல்.முருகனுடன் அமித் ஷா ஆலோசனை...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2021, 8:44 PM IST
Highlights

இதற்காக பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைவான நாட்களே உள்ளதால் ஜனநாயக திருவிழா களைகட்டியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் அறிவிப்பு என கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள அதிமுக, பாஜக, பாமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. 

இந்த முறை கணிசமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களை பேரவைக்கு அனுப்பியே ஆக வேண்டுமென பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சீட் குறைவாக இருந்தாலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தட்டித்தூக்க வேண்டுமென நினைத்த பாஜக, நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், மொடக்குறிச்சி, ராமநாதபுரம், ஆயிரம் விளக்கு, துறைமுகம், திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு,  விருதுநகர்,  அரவக்குறிச்சி,  உதகமண்டலம்,  திருவையாறு,  திருநெல்வேலி,  தளி, தாராபுரம் , காரைக்குடி,  மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளை பெற்றுள்ளன.

இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை முடிவு செய்ய வேண்டிய இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன. இதற்காக பாஜக உத்தேச வேட்பாளர்கள் பட்டியலுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பொறுப்பாளர் சி.டி.ரவி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி சென்றனர். தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி மத்திய உள்துறை அமித் ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் அமித் ஷா தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களின் பெயர்களை டிக் அடிப்பார் என்றும், அதன் பின்னர் சென்னை திரும்பும் பாஜக நிர்வாகிகள் நாளை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

tags
click me!