மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு பாஜகவும் அதிமுகவும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. செந்தில் பாலாஜி.

By Ezhilarasan BabuFirst Published Aug 8, 2022, 7:07 PM IST
Highlights


மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக அதிமுக  எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என தமிழக  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு பாஜக அதிமுக  எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என தமிழக  மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை மத்திய மின்சார துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள நிலையில், செந்தில்பாலாஜி  இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ஆம் தேதி தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் கடும்  அமளியால்  பல நாட்கள் கூட்டம் முடக்கியது, இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார திருத்த சட்ட மசோதா மின்துறை அமைச்சர் தாக்கல் செய்தார், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் இது தாக்கல் செய்யப்பட்டது.  இந்த திருத்தப்பட்ட மசோதாவில் மாநில மின் வாரியங்களுக்கு மாற்றாக மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதனிடம் அனுமதி பெற்று மின் வினியோகத்தில் நேரடியாக தனியார் நிறுவனங்கள் ஈடுபடலாம் என்பது முக்கிய சரத்து ஆகும்.

இதையும் படியுங்கள்: பாஜகவில் இணைந்தார் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்… சென்னை பாஜக உறுப்பினர்கள் பலம் 2 ஆக அதிகரிப்பு!!

மேலும் மாநில அரசு மக்களுக்கு வழங்கி வரும் இலவச மின்சாரம் உள்ளிட்டவற்றிற்கான மானியத்தை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மின்சாரம்  தொடர்பான அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடமே குவிந்திருக்கும் என்பதே இந்த மசோதாவில் சாரம்.  இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு போராட்டம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .

இது ஒருபுறம் உள்ள நிலையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய அரசின் இந்த திருத்த மசோதாவை கண்டித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு உட்பட திமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும் அவர்  கூறினார்.

ஆனால் இந்த சட்ட திருத்தத்தை அதிமுகவும் பாஜகவும் ஏன் எதிர்க்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த சட்டம் விவசாயிகளுக்கு மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சட்டமாக உள்ளது, இந்த சட்டம் அமலாகும் பட்சத்தில்  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், விசைத்தறிகளுக்கு, குடிசைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் இல்லாமல் போகும் நிலை உருவாகும். மாநில அரசின் ஆணையத்திற்கு எந்தவித அதிகாரமும் அளிக்கப்படாமல் அனைத்து அதிகாரத்தையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ளும் நிலை உருவாகும். அதிமுக நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையே ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

 

click me!